செயற்கை நுண்ணறிவினால் மரணித்தோரின் அடையாளங்களை சிதைக்காதீர்கள் : வலியுறுத்தியுள்ள சட்டத்தரணி பெனிஸ்லொஸ் துஷான் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 6, 2025

செயற்கை நுண்ணறிவினால் மரணித்தோரின் அடையாளங்களை சிதைக்காதீர்கள் : வலியுறுத்தியுள்ள சட்டத்தரணி பெனிஸ்லொஸ் துஷான்

(நா.தனுஜா)

மனிதப் புதைகுழியில் கண்டறியப்படும் மனித எலும்புக்கூடுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் திரிபுபடுத்தப்பட்ட கற்பனைப் புகைப்படங்களாக மாற்றியமைப்பதன் மூலம் உண்மையான அடையாளங்களும் மனிதமாண்பும் கேள்விக்குள்ளாக்கப்படும் எனவும், நீதிச் செயன்முறைகள் மீதான நம்பிக்கையீனத்தைத் தோற்றுவிப்பதுடன் வரலாற்றுப்பதிவை அழிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி பெனிஸ்லொஸ் துஷான், எனவே செயற்கை நுண்ணறிவின் துணையுடன் மரணித்தோரின் அடையாளங்களை சிதைப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்களுக்கு பலரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் கற்பனை உருவம் அளித்து, தமது சமூகவலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ள சட்டத்தரணி பெனிஸ்லொஸ் துஷான், மேலும் கூறியிருப்பதாவது,

முதலாவதாக, பலியான ஒவ்வொருவரும் தனித்த, உண்மையான அடையாளத்தைக் கொண்ட தனி நபர்களாவர். அவர்களுக்கென தனித்துவமான பெயர், முகம், அங்க அடையாளங்கள், குடும்பம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் என்பன உண்டு. அவ்வாறிருக்கையில் அந்த நபர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக கற்பனைப் படங்களை உருவாக்கிப் பகிர்வது அவர்களை வெறுமனே ஒரு மாதிரிக் காட்சியாக மாற்றிவிடும். இது அவர்களைப் பற்றிய நினைவுகளையும், மனிதமாண்பையும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இரண்டாவதாபக மனிதப் புதைகுழி அகழ்வு என்பது நீதவானின் மேற்பார்வையின் கீழ் தொல்லியல் நிபுணர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர், ஆய்வாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து உண்மையை வெளிக்கொணர்வதற்காக, பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கும் சிக்கலானதும், கடினமானதுமான ஒரு செயன்முறையாகும். இந்த செயன்முறை மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை என்பது நீதிக்கான பயணத்துக்கு மிக அவசியமாகும். அவ்வாறிருக்கையில் இவ்விடயத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்துவது மக்களின் நம்பிக்கையிலும், நீதிமன்றங்களிலும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கக்கூடும். குறிப்பாக போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை மறுப்பவர்கள், அதனை ஒரு திட்டமிடப்பட்ட கட்டுக்கதை எனப் புனைந்து கூறுவதற்கு இவ்வாறான படங்கள் வாய்ப்பளிக்கும்.

மூன்றாவதாக மனிதப் புதைகுழியில் இருந்து கண்டறியப்படும் உயிரிழந்தவர்கள் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கக்கூடாது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் படங்கள் அவர்களது தோற்றம், வயது, பாலினம் என்பன தொடர்பில் தவறான அடையாளங்களைக் காண்பிக்கக்கூடும். அது இன்றுவரை நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை மேலும் புண்படுத்தும்.

நான்காவதாக மருந்தியல் மற்றும் மரண விசாரணை நிபுணர்கள் பலியானவர்களின் எலும்புகளை வைத்து நுட்பமான முறையில் அவர்களது முகத்தை மீண்டும் உருவாக்குகின்றனர். இருப்பினும் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும் படங்கள் இந்த அறிவியல் செயன்முறையை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியப்பாடு உள்ளது.

ஐந்தாவதாக இவ்வாறான செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் வரலாற்றுப் பதிவைக் கேள்விக்குள்ளாக்கும். மனிதப் புதைகுழிகள் நாட்டின் வரலாற்றின் இருண்ட பக்கங்களைக் குறிக்கின்றன. அது பற்றிய உண்மையைப் புரிந்துகொள்வதற்கு வருங்கால சந்ததியினரும், வரலாற்றாசிரியர்களும் சேமிக்கப்பட்டுள்ள ஆவணங்களையே பார்வையிடுவர். எனவே அந்த ஆவணங்களில் உண்மையான சாட்சியங்களுக்குப் பதிலாக, இவ்வாறான கற்பனைப் படங்கள் இருப்பின், அது வரலாற்றையே கற்பனையாக மாற்றிவிடும். அதன்விளைவாக உண்மையை உறுதிப்படுத்தமுடியாத நிலையேற்படும்.

இவ்வாறான காரணங்களால் செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழி அகழ்வின்போது கண்டறியப்படும் எலும்புக்கூடுகளையும், மனித எச்சங்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் திரிபுபடுத்தப்பட்ட கற்பனைப் புகைப்படங்களாக மாற்றியமைப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment