(எம்.ஆர்.எம்.வசீம்)
கொத்மலை பஸ் வித்து தொடர்பான இராசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன் அதன் உண்மைத்தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம், எதனையும் மறைக்க முற்பட மாட்டோம் என போதுக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன் ஒரு வருட காலத்துக்குள் இன்றைய காலத்துக்கு ஏற்றவகையில் பொதுப் போக்குவரத்து சேவையை கட்டியெழுப்புவோம். கடந்த கால ஆட்சியாளர்கள் சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்தார்களே தவிர பொதுப் போக்குவரத்துக்கு பாதுகாப்பான வாகனங்களை கொள்வனவு செய்ய தவறி இருக்கிறார்கள்.
போக்குவரத்து அமைச்சில் புதன்கிழமை (14 )இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பான வாகன போக்குவரத்துக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கள் தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தபோது பொலிஸாருக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. சமூக வலைத்தளங்களில் சாதகமான வரவேற்புகள் இருந்தபோதும், ஊடகங்களே அதற்கு எதிரான வகையில் அதிகளவில் அழுத்தங்களை பிரயோகித்தன. இந்நிலையில் கால அவகாசங்கள் வழங்கப்பட்டன. இப்போதும் அதற்கான காலம் வந்துள்ளது.
இதன்படி இந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்க்கின்றோம். இதன்போது பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை வாகனங்கள் தொடர்பில் சிறிது கால அவகாசத்தை வழங்கி வேலைத்திட்டத்தை செயற்படுத்துவோம்.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் பாதுகாப்பான பயணத்திற்கு பொருத்தமான பஸ்களை மட்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பின்னர் தற்போதுள்ள பொதுப் போக்குவரத்து பஸ்களை எவ்வளவு காலத்திற்கு சேவையில் ஈடுபடுத்த முடியும் என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்க வேண்டியுள்ளது. இதனை கட்டம் கட்டமாக செயற்படுத்துவோம்.
இதேவேளை நாட்டில் இடம்பெறும் பஸ் விபத்துக்களில் திட்டமிட்ட அழிவுகளின் பெறுபேறுகளும் இருக்கின்றன. இலங்கை போக்குவரத்து சபை சாபத்திற்கு உள்ளான ஒன்று, அங்கே சாரதிகளுக்கு பொருத்தமான ஓய்வு இடங்கள் இல்லை. இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும். அது தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானங்களை எடுக்கின்றோம். ஒரு வருட காலத்துக்குள் இ்ந்த துறையை கட்டியெழுப்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
நாட்டில் தற்போது 60 வகையான பஸ்கள் உள்ளன. 50 வருட பஸ்களும் உள்ளன. ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கும் பஸ்களும் இருக்கின்றன. ஆனால் 12 வகையான பஸ்களே அதிகளவில் சேவையில் ஈடுபடுகின்றன. இவற்றில் பல பாதுகாப்பான பயணத்திற்கு பொருத்தமற்றதாக இருக்கின்றன. சில கிராம வீதிகளில் தரமற்ற பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இதனால் இது தொடர்பில் ஆராய்ந்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
மேலும் எமது நாட்டுக்கு பாதுகாப்பான பஸ்களை கொள்வனவு செய்வது என்பது பாரிய செலவாகும். என்றாலும் பாதுகாப்பான வீதிக்கு ஏற்ற பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து பஸ்கள் தேவையாகும்.
கடந்த கால ஆட்சியாளர்கள் அதிசொகுசு வாகனங்னங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்களே தவிர பொதுப் போக்குவரத்துக்கு பொருத்தமான பாதுகாப்பான பஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய தவறி இருக்கிறார்கள். அதன் விளைவே தற்போது ஏற்படுகின்ற விபத்துக்களுக்கும், இறப்புக்களுக்கும் காரணமாகும்.
அத்துடன் கொத்மலை பஸ் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வின் மூலமே வெளிவரும். அதனால் நாங்கள் எதனையும் மறைக்க முயற்படமாட்டோம். ஆய்வு அறிக்கை வெளிவந்ததுடன் அதுெதாடர்பான உண்மை தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment