260 பேரை பலி கொண்ட கடந்த மாதம் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விமானத்தின் எஞ்சின்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடையே இதற்கான காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 12ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 வகை விமானம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நில நிமிடங்களில் வீழ்ந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் மருத்துவ மாணவர் விடுதியில் இருந்தவர்கள் என 260 பேரின் உயிரிழந்திருந்தனர்.
இந்தியாவின் விமான விபத்து விசாரணை பணியகத்தின் அறிக்கையின்படி, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் விமான அறையில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் முறையாக இயங்காமையால், எஞ்சின்களுக்குரிய எரிபொருள் கிடைக்காமல் போயிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கறுப்புப் பெட்டி பதிவிலிருந்து தகவல்களைப் பெற்றுள்ள விசாரணையாளர்கள், இதில் 49 மணிநேர விமான தரவுகளும், விபத்துக்கான தருணங்கள் உட்பட இரண்டு மணிநேர விமான அறை ஓடியோவையும் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் குறித்த அறிக்கையின்படி, விமானம் 180 நொட்ஸ் வேகத்தை அடைந்தபோது, விமானத்தின் இரு எஞ்சின்களின் எரிபொருளைத் துண்டிக்கும் சுவிட்ச்களும் ஒரு செக்கன் இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக RUN இலிருந்து CUTOFF நிலைக்கு மாறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான அறை குரல் பதிவிற்கு அமைய, ஒரு விமானி மற்றைய விமானியிடம் ஏன் நீங்கள் எரிபொருளை துண்டித்தீர்கள் என்று கேட்பதும், அதற்கு மற்றைய விமானி தான் அதைச் செய்யவில்லை என்றும் பதிலளிப்பதும் கேட்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், சுவிட்ச்கள் மீண்டும் அவை இருக்க வேண்டிய நிலைக்கு மாற்றப்பட்டதாகவும், விபத்து நடந்தபோது எஞ்சின்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
போயிங் 787 விமானத்தில், எரிபொருள் துண்டிப்பு சுவிட்ச்கள் இரண்டு விமானிகளின் இருக்கைகளுக்கு இடையில், விமானத்தின் லிவர்களுக்குப் பின்னால் நேரடியாக அமைந்துள்ளன.
அவை பக்கவாட்டில் ஒரு உலோகப் பட்டியால் பாதுகாக்கப்பட்டு, தற்செயலான துண்டிப்பைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பூட்டு பொறிமுறையையும் கொண்டுள்ள நிலையில் இது எவ்வாறு இடம்பெற்றது என கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
No comments:
Post a Comment