பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும். பொலிஸ் பாதுகாப்பில் உள்ள சந்தேகநபர்கள் உயிரிழப்பதால் பொலிஸ் அதிகாரிகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இது பொதுமக்கள் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினை. இவ்வாறான செயற்பாடுகளினால் பொதுமக்களுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் உள்ள நம்பிக்கையும் நட்புறவும் பாதிக்கப்படுகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ மேலும் தெரிவிக்கையில், ஒரு சந்தேகநபரை கைது செய்யும்போது அவரது உடல் நிலை குறித்து பொலிஸார் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கைது செய்யப்படும் சந்தேகநபர் தான் சுகயீனமுற்று இருப்பதாகக் கூறினால், அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சந்தேகநபர் கைது செய்யப்படும்போது அவரது உடலில் காயங்கள் காணப்பட்டால், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.
கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு உரிய வேளைகளில் தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும். அவர்கள் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
சில பொலிஸ் அதிகாரிகள் கைதான சந்தேகநபர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்காமல், அவர்களை நாட் கணக்கில் தடுப்புக் காவலில் வைத்து பலமாகத் தாக்கி, காயப்படுத்துகின்றனர். இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
பொலிஸ் அதிகாரிகள் தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்த முடியாது. இவ்வாறு சட்டத்துக்கு முரணாக, தகாத முறையில் செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொலிஸ் அதிகாரிகள் கைதான சந்தேகநபர்களை வேறோர் இடத்துக்கு மாற்றும்போது அவர்களை எங்கு அழைத்துச் செல்கின்றார்கள், எத்தனை பொலிஸ் அதிகாரிகள் உடன் செல்கின்றார்கள், என்னென்ன ஆயுதங்களைக் கொண்டு செல்கின்றார்கள் என்பது தொடர்பாக அறிந்திருப்பது அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கடமையாகும்.
பொலிஸ் நிலையங்களின் சிறைக் கூண்டுகளில் மாத்திரம் அல்ல சிறைச்சாலைகளிலும் கைதிகள் உயிரிழக்கின்றனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
பொலிஸ் நிலையங்களின் சிறைக் கூண்டுகளில் இடம்பெறும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட, அந்தந்த பொலிஸ் நிலையங்களிலேயே விசாரணை செய்யப்படுகின்றது. இது எவ்வாறு நியாயமாகும்?
எனவே, பொலிஸாரால் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் உயிரிழந்தால், அது தொடர்பாக விசாரணை செய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment