(ஸ்டெப்னி கொட்பிறி)
உலகில் உள்ள பல நாடுகளில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த கடமையுணர்வு இலங்கையிலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கெயான் தினுக் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கெயான் தினுக் குணதிலக்க தெரிவிக்கையில், கைதிகளின் பாதுகாப்பின்மை தனிப்பட்ட மனிதர்களின் உரிமைகளைப் பாதிக்கும் விடயமாகும்.
எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டியை பொலிஸ் அதிகாரிகள் உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவற்றில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து மாத்திரமே எமது ஆணைக்குழுவால் நடவடிக்கை எடுக்க முடியும்.
பொதுமக்களின் நலன்கருதி நாட்டில் பல ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன. எனவே, தங்களது முறைப்பாட்டுடன் தொடர்புடைய ஆணைக்குழு எதுவோ, அந்த ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை அளிப்பது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என தினுக் குணதிலக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment