(ஸ்டெப்னி கொட்பிறி)
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.டீ.பி. தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இச்சந்திப்பு வேளையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக பொலிஸ் நிலையங்களின் சிறைக் கூண்டுகளில் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்களும், பொலிஸாரால் கைது செய்யப்படும் சந்தேகநபர்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் பல இடம்பெற்று வருகின்றன. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உயிர் வாழும் உரிமை உண்டு.
கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் குற்றவாளியா, இல்லையா என்பதை உறுதி செய்வதும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதும் சட்டத்தின் பொறுப்பாகும். அதேபோல கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
பொலிஸாரால் கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டதா, கைதிகள் பயன்படுத்தும் வகையில் சுத்தமான கழிவறைகள் உள்ளனவா, சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா என்பனவற்றை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.
எனவே, ஒரு சந்தேகநபரை கைது செய்யும்போது பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டிக் கையேடு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டிக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒரு சந்தேகநபர் எவ்வாறு கைது செய்யப்பட வேண்டும், சந்தேகநபரை கைது செய்யும்போது பொலிஸார் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், சந்தேகநபர் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், சந்தேகநபர் சிறைச்சாலையில் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், சந்தேகநபர் “குற்றவாளி” என சட்டத்தினால் தீர்மானிக்கப்பட்ட பின்னர் அவர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் முதலான பல்வேறு விடயங்கள் இந்த வழிகாட்டி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இந்த கையேட்டில் குறிப்பிடப்படும் விடயங்களை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.
அடிப்படை மனித உரிமைகள் என்ற அடிப்படையில், கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு நல்ல உணவு, சுத்தமான தண்ணீர், சுத்தமான கழிவறை வசதிகளை பெற்றுக் கொடுப்பது மிக முக்கியமான கடமையாகும்.
அத்துடன், ஊடகங்களும் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் தனிப்பட்ட விபரங்களை (பெயர், பழைய குற்றங்கள், தொழில் மற்றும் குடும்பத்தினரின் விபரங்கள்) செய்திகளாக வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அவ்வாறான விபரங்கள் அடங்கிய செய்திகள் வெளியாகும் பட்சத்தில் சந்தேகநபர் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சந்தேகநபர் தவறான வழிக்குச் செல்லக்கூடும்.
கைதான சந்தேகநபர் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் செய்திகளாக வெளியான பின்னர், அந்த சந்தேகநபர் “குற்றமற்றவர்” என சட்டத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டால், முன்னதாக வெளியான அவர் பற்றிய செய்திகள் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்துவிடக்கூடும் என்பதும் கவனிக்க வேண்டிய விடயமாகிறது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment