வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகைக்கு விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட 10% (Withholding Tax) வரியிலிருந்து விலக்கு பெறுவதற்கு வசதிகள் இருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் வைப்புத் தொகைக்கு விதிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்ட 10% வரியிலிருந்து விலக்கு பெற தகுதியுடைய அதாவது, ஆண்டு வருமானம் 18 இலட்சத்திற்கு குறைந்த பயனாளிகள் அந்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் சுய அறிவிப்பு பத்திரத்தை சமர்ப்பிக்க முடியும் என உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் கே.எஸ். சாந்த தெரிவித்துள்ளார்.
இதுவரை வரி செலுத்துவோர் அடையாள (TIN) எண்ணைப் பெறாதவர்கள் கூட வங்கிகளுக்கு இவ்வாறான அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம் எனவும் பிரதி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
TIN எண் இல்லாவிட்டாலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் இந்த சுய அறிவிப்புகளை ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், TIN எண் இல்லாமல் அறிவிப்புகளை வழங்குபவர்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் TIN எண்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இதேவேளை, உள்நாட்டு இறைவரி சட்ட விதிகளின் கீழ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வருமானம் குறித்து தவறான தகவல்களை வழங்கும் நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கே.எஸ்.சாந்த மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment