(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விநியோகஸ்தர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை அரசாங்கம் அவர்களுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கு தீர்வுகாண முற்பட்டால் அது பாரிய பிரச்சினையில் முடிவடையும் என நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியுமாகி இருக்கிறது. அரசாங்கம் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை மறந்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கருத்தின் பிரகாரம் மின்சார கட்டணத்தை மேலும் நூற்றுக்கு 30 வீதத்தால் குறைக்க முடியும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பத்தையாவது செய்யவில்லை. பெற்றோல் லீ்ட்டர் 150 ரூபாவுக்கு வழங்க முடியும் என்றார்கள்.
14 இலட்சம் ரூபாவுக்கு வாகனம் வழங்குவதாக தெரிவித்தார்கள். ஆனால் இன்று எல்டோ ரக கார் 70 இலட்சம் ருபா. அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தற்போது கிடப்பில் போட்டுவிட்டு சர்வதேச நாணய நிதியத்தினதும், தாத்தாவின் கொள்கை பிரகடனத்தையுமே முன்னெடுத்து செல்வதாக தெரிகிறது.
மேலும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. அந்த தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.
அரசாங்கம் இவர்களுடன் முறையாக கலந்துரையாடி இருந்தால் இதனை தீர்த்துக் கொண்டிருக்க முடியும். அரசாங்கம் தெரிவிக்கின்ற பிரகாரம் இவர்கள் செயற்படப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் வியாபாரிகள். இந்த வியாபாரிகள் அரசாங்கத்துக்கு வாக்களித்திருக்கின்றனர், தேர்தலுக்கு செலவழிக்க இவர்கள் அரசாங்கத்துக்கு பணம் கொடுத்தும் இருக்கலாம்.
அரசாங்கம் இவர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வுகாணாமல், எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு தடையை ஏற்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை மேற்கொள்ளப்போவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்கள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இவ்வாறு இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. தற்போது இவர்கள் எரிபொருள் கொள்வனவு கட்டளையை நிறுத்தியுள்ளனர்.
அதேநேரம் அவர்கள் எரிபொருளை கொள்கனவு செய்து விநியோகிப்பதாக இருந்தால், வைத்தியசாலை, பொலிஸ் திணைக்களம் போன்றவற்றுக்கு கடனுக்கு எரிபொருள் விநியோகிப்பதில்லை என தெரிவித்திருக்கின்றனர். அதேபோன்று கடன் அட்டைகளுக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாது என தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறு செயற்பட்டால் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது.
அதேபோன்று அரச துறைக்கு நாளாந்தம் பணம் கொடுத்து எரிபொருள் நிரப்புவது சாத்தியமில்லை. அதனால் இதனை அதிகாரத்தை பயன்படுத்தி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் எரிபொருள் விலையை குறைத்திருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறாது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நூற்றுக்கு 30 வீதம் செல்வதை தடுத்து அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment