மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் விரும்பவில்லை : எங்களுக்கு அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கங்கள் கிடையாது - சாமர சம்பத் - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் விரும்பவில்லை : எங்களுக்கு அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கங்கள் கிடையாது - சாமர சம்பத்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஒருவாரத்துக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில் உள்ளது என்று குறிப்பிட்டு கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய அந்த அரசாங்கத்தின் அமைச்சர் இன்று வீட்டில் இருக்கிறார். பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம். எரிபொருள் விநியோகஸ்த்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள். மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் விரும்பவில்லை என்று புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிதார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, மின்சக்தி அமைச்சர் சுற்றிவளைக்காது, திடீர் மின்சாரத் தடைக்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். தொப்பி வியாபாரியின் கதையைப் போன்றே இங்கு குரங்கால் மின் தடை ஏற்பட்டதாக கூறப்பட்ட கதை உலகம் பூராகவும் சென்றது. அன்று மின் தடையின்போது நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்தீர்கள். அப்போது உங்கள் நண்பருடன் இருந்துள்ளீர்கள். நீங்கள் தேடிப்பார்க்காமலே குரங்கு கதையை ஊடகங்களுக்கு குறிப்பிட்டீர்கள்.

குரங்கால் மின் விநியோகம் தடைப்படவில்லை என்று மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதனால் மின்சார அளவு அதிகமாக இருந்த காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தமையினால் மின் அழுத்தம் அதிகமாக இருந்தது. இதுதான் காரணம். இதற்கு தீர்வு காண வேண்டும்.

இப்போது சூரிய சக்தி மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார சபையின் மாபியா உள்ளது. மின்சார சபையின் சிலர் பொருத்தமில்லாத வேலைகளை செய்தால் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும்.

நகத்தால் கிள்ளி எரிய வேண்டியதை கோடாரியால் வெட்டும் நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டாம். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஒரு வாரத்திற்கு மாத்திரம் எரிபொருள் இருப்பதாக மின்சக்தி அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முதலில் காரணமானவர் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே. அந்த அமைச்சர் இப்போது வீட்டில் இருக்கின்றார். இதனால் எதுவாக இருந்தாலும் பேசித்தீர்மானங்களை எடுங்கள். அதற்காக கலந்துரையாடுங்கள்.

எங்களுக்கு அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கங்கள் கிடையாது. மின் தடைக்கு அமைச்சர் ஒரு காரணத்தை கூற மின்சார சபை வேறு ஒரு காரணத்தை கூறுகிறது. இந்தப் பிரச்சினையில் என்ன நடந்தது என்பதனை தேடிப்பாருங்கள். அனைத்தையும் ஜனாதிபதியிடம் கொண்டுசெல்ல வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment