மக்களுக்கு தெரிவித்த 33 வீத மின்சார கட்டணத்தை எப்போது குறைப்பீர்கள் என்பதை தெரிவியுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

மக்களுக்கு தெரிவித்த 33 வீத மின்சார கட்டணத்தை எப்போது குறைப்பீர்கள் என்பதை தெரிவியுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்த 33 வீத மின்சார கட்டணத்தை எப்போது குறைக்கப்போகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆடப்போகிறதா என்பதை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (3) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின்போதும் பாராளுமன்றத் தேர்தலின்போதும் எரிபொருள் விலையை பாரியளவில் குறைக்க முடியும் என தெரிவித்து வந்தனர். அதனை எவ்வாறு குறைக்க முடியும் என்பதையும் தெரிவித்தார்கள்.

எரிபொருளுக்கு 50 ரூபா வரி அறவிடுவதற்கு மேலதிகமாக இன்னும் பாரியளவில் வரி அறவிடப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமான வரி இருக்கிறது. எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கடனை திறைசேரிக்கு எடுத்துக் கொண்டோம். தற்போது எரிபொருள் கூட்டுத்தாபனம் கடன் இல்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு லீட்டருக்கும் 50 ரூபா வரி அறவிடப்படுகிறது என அன்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இவ்வாறு தெரிவித்துவிட்டு அனைத்து வரிகளையும் இரத்து செய்து நுகர்வோருக்கு நியாயமான முறையில் எரிபொருளை விநியோகிப்பதாகவே தெரிவித்தார். ஜனாதிபதி அன்று மக்களுக்கு தெரிவித்த வாக்குறுதியை ஏன் அரசாங்கத்துக்கு செய்ய முடியாது என கேட்கிறோம்.

அதேபோன்று 9 ஆயிரம் ருபாவுக்குரிய மின் கட்டணத்தை 6 ஆயிரம் ரூபாவாகவும் 3 ஆயிரம் ரூபா மின் கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாவாகவும் அனைவருக்கும் நூற்றுக்கு 33 வீதம் மின் கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் நூற்றுக்கு 20 வீதம் மின்சார கட்டணத்தை குறைத்திருக்கிறதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதுவும் மக்கள் போராடியதாலே அதனை குறைத்தார்கள்.

6 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை குறைக்க முடியாது என்றே தெரிவித்தார்கள். அதனால் எஞ்சிய நூற்றுக்கு 13 வீத மின்சார கட்டண குறைப்பை எப்போது அரசாங்கம் மேற்கொள்ளப்போகிறது என அமைச்சரிடம் கேட்கிறேன்.

மேலும், அண்மையில் நாட்டில் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டதற்கு குரங்கு பாய்ந்ததால் ஏற்பட்டது என சிலர் தெரிவித்து வந்தார்கள். ஆனால் அது எதனால் ஏற்பட்டது என எங்களுக்கு தெரியாது. என்றாலும் குரங்கு ஒன்றின் காரணமாக முழு நாட்டினதும் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவே சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இவ்வாறு செய்தி வெளியிடும்போது நேரடி முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? சர்வதேச முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா?

அதனால் நாட்டில் இவ்வாறான சம்பவம் ஒன்று ஏற்பட்டால் அது தொடர்பில் பதிலளிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கடமைப்பட்டிருக்கிறார். அதனை செய்ய தவறியதன் மூலம் மின்சார பாவனையாளர்கள், தொழிற்சாலைகள் அசெளகரிய நிலைக்கு ஆளாகுவது மாத்திரமல்லாது நாடு எதிர்பார்க்கும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கும் பாரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

2028 இல் கடன் மீள செலுத்துவதற்கு எங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி இலக்கொன்று இருக்கிறது. அதேபோன்று அரச வருமான இலக்கொன்று இருக்கிறது. இந்த இரண்டு இலக்குகளையும் அடைந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் நாடு பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும். அதனால் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை நீக்கி நுகர்வோருக்கு அதன் நன்மையை அரசாங்கம் எப்போது மேற்கொள்ளப்போகிறது?

அதேபோன்று மின்சார கட்டணத்தை மூன்றில் இரண்டு எப்போது குறைக்கப் போகிறது? அத்துடன் மின்சார கட்டண விலை சூத்திரத்தை அரசாங்கம் பின்பற்றுகிறதா? அல்லது புதிய சூத்திரத்தை அரசாங்கம் தெரிவிக்க முடியுமா? அவ்வாறு இல்லாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு பாடிக்கொண்டிருக்கிறதா என கேட்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment