(எம்.ஆர்.எம்.வசீம்)
தேசிய மக்கள் சக்தியில் இருந்து நியமிக்கப்படும் சபாநாயகர் தொடர்பில் நம்பிக்கை இல்லை. அதனால் சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் ஒருவரை பிரேரிப்போம். என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
குருணாகலையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல தனது கலாநிதி பட்டத்தை உறுதிப்படுத்த முடியாமல் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது போன்று இன்னும் சிலர் இவ்வாறு பொய்யாக கல்வி தரங்களை தெரிவித்திருப்பதாக தற்போது வெளிப்பட்டு வருகிறது.
குறிப்பாக பிரதி சபாநாயகர் விசேட வைத்திய நிபுணர் என்றே தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவ்வாறு ஒன்று இல்லை என தற்போது தெரிவிக்கப்படுகிறது.
வைத்திய நிபுணர் என்ற வார்த்தையை நினைத்த பிரகாரம் பயன்படுத்த முடியாது என மருத்துவ சங்கத்தில் சில விதிகள் இருக்கின்றன. அதனால் பிரதி சபாநாயகரும் பதவி விலக வேண்டும். இது தொடர்பாக இலங்கை மருத்துவ சங்கத்தில் முறையிட இருக்கிறோம்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் அசோக சப்புமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து மாத்திரம் விலகி இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது. அவர் பொய்யான கல்வி தரத்தை மக்களுக்கு தெரிவித்தே தேர்தலில் போட்டியிட்டார். மக்களை ஏமாற்றியே அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும்.
கல்வியை திருடியவர்கள் தற்போது அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களின் பணம், நாட்டு வளங்களை திருடாமல் இருப்பார்கள் என தெரிவிக்க முடியாது. அதனால் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் புதிய சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட இருக்கிறார். இதன்போது எம்மில் இருந்தும் ஒருவரை சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்க இருக்கிறோம்.
ஏனெனில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவு செய்யப்படும் சபாநாயகர் தொடர்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மீண்டுமொரு முறை எங்களுக்கு ஏமாற முடியாது.
அசோக சப்புமல் ரன்வலவை சபாநாயகராக தெரிவு செய்யும்போது எங்களில் இருந்து யாரையும் பிரேரிக்காமல் நாங்களும் அதற்கு ஆதரவளித்தோம். அதனால் இந்த முறை எதிர்க்கட்சியில் இருந்து நாங்கள் சபாநாயகர் ஒருவரை பெயரிட இருக்கிறோம்.
அவர் பொய்யான கல்வி சான்றிதழ்களை வைத்திருப்பவர் அல்ல. மிகவும் பொருத்தமான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை பிரேரிக்க இருக்கிறோம். இது தொடர்பில் இன்று எமது பாராளுமன்ற குழு கூடி கலந்துரையாட இருப்பதுடன் எதிர்க்கட்சியில் இருக்கும் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி சுயாதீனமாக செயற்பட முடியுமான ஒருவரை நியமிக்க எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் பெயரிடும் உறுப்பினர் தெரிவு செய்யப்படாமல் போகலாம். என்றாலும் அசோக சப்புமல் ரன்வலவுக்கு ஏற்பட்டதுபோன்றதொரு நிலை ஏற்பட்டால், அரசாங்க தரப்பினால் நியமிக்கப்படும் சபாநாயகரைவிட எமது தரப்பினால் நியமிக்கப்பட்ட நபர் எந்தளவு பொருத்தம் என்பதை மக்களுக்கு உணர்ந்து கொள்ள முடியுமாகும். எம்மிடமும் சிறந்த கல்விமான்கள் இருக்கிறார்கள் என்பதை எமக்கு இதன்போது காட்ட முடியும் என்றார்.
No comments:
Post a Comment