கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டில் அரசாங்கம் : நான் முறையாகவே கல்வி தகைமையை பெற்றுக் கொண்டுள்ளேன் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டில் அரசாங்கம் : நான் முறையாகவே கல்வி தகைமையை பெற்றுக் கொண்டுள்ளேன் - நாமல் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொங்கு பாலத்தில் என்னை தூக்கிச் சென்றாரா? அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தூக்கிச் சென்றாரா ? என்பதை மக்கள் ஆராய வேண்டும். உண்மையில் ஜனாதிபதியையே ரணில் விக்கிரமசிங்க தூக்கிச் சென்றுள்ளார். கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, போலியான கல்வித் தகைமையை குறிப்பிட்டுக் கொண்டு பதவிக்கு வந்த அசோக்க ரன்வல பதவி விலகியமை வரவேற்கத்தக்கது. படித்தவர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக பாராளுமன்றத்தை அமைப்போம் என்று ஜனாதிபதி குறிப்பிட்ட காரணத்தால்தான் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காக இல்லாத கல்வித் தகைமையை பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனது கல்வித் தகைமை தொடர்பில் பலர் கேள்வியெழுப்பியுள்ளார்கள். கடந்த காலங்களிலும் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது. நான் முறையாகவே கல்வித் தகைமையை பெற்றுக் கொண்டுள்ளேன். சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் முறையான வகையில் எனது கல்வித் தகைமையை சவாலுக்குட்படுத்தினால் அதற்கு சிறந்த முறையில் ஆவணங்களுடன் பதிலளிப்பேன்.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கியது, அதுவே இன்று அரசாங்கத்துக்கு எதிர்வினையாக அமைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொங்கு பாலத்தில் என்னை தூக்கிச் சென்றாரா அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தூக்கிச் சென்றாரா என்பதை மக்கள் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்திய பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்ந்து அமுல்படுத்துகிறார்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை குறிப்பிட வேண்டும். ஜனாதிபதி எளிமையாக செயற்படுதால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. ஏற்றுக் கொண்ட வரிக் கொள்கைகளை மறுசீரமைத்தால் மாத்திரமே மக்களுக்கு பயன் கிடைக்கும்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகிறது. மக்களுக்கு ஒன்றை குறிப்பிட்டு விட்டு, இரகசியமான முறையில் பிறிதொன்றை செயற்படுத்துகிறது. ஆகவே கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் உண்மையான நிலைப்பாட்டை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment