முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை; அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு - நினைவுரையில் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 26, 2025

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை; அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு - நினைவுரையில் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு போதும் வடக்கு, கிழக்கு இணைப்பில்லை என மறைந்த அபூர்வ ஆளுமை இரா.சம்பந்தன் ஐயா தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ.பிலபிற்றிய, டபிள்யூ, ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலினி பொன்சேகா ஆகியோர் மீதான அனுதாப பிரேரணையில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் பாராளுமன்றத்தில் நாங்கள் மிக அபூர்வமாக காண்கின்ற ஆளுமை என்று சொன்னால் அது மிகையாகாது.

சம்பந்தனுடைய அரசியல் வெவ்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராயப்பட வேண்டும். அவருடைய சரிதை எழுதப்படுகின்றபோது அந்தந்த யுகங்களில் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கான அவருடைய பங்களிப்பை நாம் நிறையவே பேசலாம்.

உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அடிப்படையில் தமிழ் விடுதலைக் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கான ஜனநாயகப் போராட்டத்தை பாராளுமன்றத்தினூடாக செய்வதற்காக முதல் முறையில் அவர் 1977ஆம் ஆண்டு தந்தை செல்வாவுடைய மரணத்திற்கு பின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் அமிர்தலிங்கத்தின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு வந்தார்.

1983ஆம் ஆண்டு கலவரத்திற்கு பிற்பாடு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இச்சபையிலிருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்த பின்னணியில், அவரும் இராஜினாமா செய்து தமிழகம் சென்றார்.

தமிழகத்திலிருந்து கொண்டு அகதியாக தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக அவர் முன்னெடுத்த போராட்டம், அப்போராட்டத்தில் மும்மூர்த்திகளாக அண்ணன் அமிர்தலிங்கம், அண்ணன் சிவசிதம்பரம், அண்ணன் சம்பந்தன் ஆகியோர் இருந்தார்கள். மேலும், தமிழர் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தில் இந்திய அரசோடு நீண்ட பேச்சுவார்த்ததைகளிலும் ஈடுபட்டனர்.

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு காரணமாக அமைந்த மிக முக்கியமான அரசியல் தலைமை எங்களுக்கு மத்தியில் இன்றில்லை என்பதையும் அந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்போது, இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற விவகாரத்தை தன்னுடைய பிற்காலத்தில் மிகத்தெளிவாக உணர்ந்துகொண்டு வட,கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு பொழுதும் நடைபெற்று விடக்கூடாதென்பதில் மிக கரிசனையோடு செயற்பட்ட ஒருவராகவும், பகிரங்கமாக தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக அதனை அவர் கூறி வந்தார். அதையிட்டு அவருக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அண்ணன் சம்பந்தனை பற்றி நீண்ட நேரமாக நாங்கள் பேசலாம். அவருடைய அரசியலில் இன்னுமொரு சவாலுக்குரிய சந்தர்ப்பமாக 2000ஆம் ஆண்டுக்கு பிற்பாடு அமைந்தது.

விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை இடம்பெற்றபோது, அப்பேச்சுவார்த்தை சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் தயார்படுத்தலின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உதயமானது.

வெவ்வேறாக பிரிந்து நின்ற அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து 22 பேரைக் கொண்ட பெரியதொரு பாராளுமன்றக் குழுவாக ஒரு பாரிய அரசியல் பிரதிநிதித்துவம் பெற்ற அமைப்பாக மிக முக்கியமான பங்களிப்பை நல்கினார்கள்.

விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அரச தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவில் நான் அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம்களின் சார்பில் நோர்வே ஏற்பாட்டாளர்களோடு கலந்து கொண்டேன்.

அப்பேச்சுவார்த்தைகளின்போது அடிக்கடி அண்ணன் சம்பந்தனோடு கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அவரோடு ஒவ்வொரு பாராளுமன்ற தெரிவுக் குழுவிலும் இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வுக்காக ஒன்றாக நான் கடமையாற்றி இருக்கிறேன்.

அச்சந்தர்ப்பத்தில், தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்கின்ற விடயத்திலும் இன்னும் தீர்வு காணப்பட்டிருக்கின்ற பல பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நாங்கள் அடிக்கடி எங்களுக்குள்ளே அளவளவியிள்ளோம்.

எப்படி சுமுகமாக இப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது என்பது சம்பந்தமான பல பிரச்சினைகளில் அவரோடு நான் கழித்த அந்த இனிய நினைவுகளைப் பற்றி மீண்டும் நான் இங்கு நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படிச் செயற்பட்டார் என்பது பற்றி நிறையப்பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இன்றியமையாத ஒரு வகிபாகத்தை அண்ணன் இரா.சம்பந்தன் வகித்தார்.

அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்ற அதேவேளை, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இன்றியமையாத ஒரு வகிபாகத்தை அண்ணன் இரா.சம்பந்தன் வகித்தார் என்பதை நான் சான்று பகிர்கின்றேன்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி

No comments:

Post a Comment