(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு முழுவதும் நிலவும் மருந்தாளர்களின் பற்றாக்குறையை நிரப்பாமல் மருந்தகங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையின் சுகாதாரத் துறையில் மருந்துச் சேவைகள் அத்தியாவசியமானதொரு அடித்தளமாக கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள 2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க புதிய மருந்துகளை ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் மூலம் மருந்தகங்களுக்கு கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், மருந்தக உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளர்களின் வேண்டுகோளின் பேரில் சட்டத்தின் சில பிரிவுகளை அமுல்படுத்துவது அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மருந்தகங்கள் தொடர்பாக மீண்டும் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பல மருந்தக உரிமையாளர்களின் உரிமப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதான தகவல்களும் முன்வைக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் மருந்தாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல், மருந்தகங்கள் மீது கடுமையான விதிமுறைகள் தொடர்ந்து விதிக்கப்படுவது குறித்து மருந்தக உரிமையாளர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்தின் விசேட கவனத்தை திருப்பும் நோக்கில் பின்வரும் கேள்விகளை நான் எழுப்புகிறேன்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்தாளர்கள், பயிற்சி பெற்ற மருந்தாளர்கள் மற்றும் தற்போதைய மருந்தாளர்கள் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாவை?
நாட்டில் காணப்படும் ஒட்டு மொத்த மருந்தக உரிமையாளர்கள் தொடர்பான தகவல்களை கொண்ட அறிக்கையை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
தற்போது பல்கலைக்கழக கட்டமைப்பில் இருந்து வருடத்திற்கு வெளியேறும் மருந்தாளர்களின் எண்ணிக்கை யாது? இதன் பிரகாரம், தற்போது எத்தனை பட்டதாரி மருந்தாளர்கள் உள்ளனர்? வெளிவாரி மருந்தாளர்கள் பரீட்சையை எதிர்கொள்பவர்களில் எத்தனை மருந்தாளர்கள் ஒரே தடவையில் பரீட்சையில் தேர்ச்சி பெறுகிறார்கள்?
பயிலுநர் மருந்தாளர்களின் பயிற்சி நடவடிக்கைகளை வலுப்படுத்த அரசாங்கத்தால் எத்தகைய திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது?
இதுவரை நடைமுறையில் இருந்த பயிலுநர் மருந்தாளர் பயிற்சி முறையை அரசாங்கம் மாற்ற விரும்புகிறதா? அதற்கான காரணங்கள் யாவை?
வெளிவாரி மருந்தாளர் பரீட்சையை இல்லாதொழிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், தனியார் துறையில் மருந்தாளர்களின் தேவையை அரசாங்கம் எவ்வாறு நிவர்த்தி செய்யும்?
2025ஆம் ஆண்டில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையால் எத்தனை மருந்தக உரிமையாளர்களின் உரிமப்பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கை மறுக்கப்பட்டுள்ளன? இதற்கான காரணங்கள் யாவை?
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை முந்தைய தளர்வான போக்கில் இருந்து விலகி, சட்டத்தின்படி கடுமையான நடைமுறையைப் பின்பற்றி, நடைமுறையில் காணப்பட்ட பல உரிமப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து சுகாதார அமைச்சின் நிலைப்பாடு என்ன?
இந்த விடயத்தில் மருந்தக உரிமையாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறதா?
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையால் மருந்தக உரிமையாளர்கள் / மருந்தாளுநர்கள் மீது எடுக்கப்பட்டுவரும் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தற்போதைய அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் யாவை?
இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காக வேண்டி அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? அவ்வாறு இல்லையெனில், குறித்த பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் காணப்பட்டு வரும் தடைகள் யாவை? எனக் கேட்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment