அரசாங்கம் திட்டமிட்டு மாகாண சபை முறைமையை பலவீனமாக்குகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் (25) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது சாணக்கியன் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ”மாகாண சபை முறைமையை பலவீனமாக்காது நான் கூறிய வக்கியல்ல வீதி, வில்லலுகுளம் வீதி, கிரான் பாலம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஏன் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றே நான் வினவுகின்றேன். அமைச்சர் விமல் ரத்னாயக்க அவர்களின் செயல்பாடுகள் எமது உரிமைகளை நலிவாக்க திட்டமிட்டே இடம்பெறுகின்றது.
பாராளுமன்றத்தில் உள்ள இந்த கேள்வி பதில் முறையை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும். ஏனெனில், இந்த கேள்வியை நான் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ஒரு சில வாரங்களிலேயே வழங்கி இருந்தேன். அந்த கேள்வி இவ்வாறு 6, 7 மாதங்களுக்கு பின்னர் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீங்கள் சிலவேளை அதற்கான வேலைகளை ஆரம்பித்து இருக்கலாம். அந்த வேலைத்திட்டம் உலக வங்கியின் நிதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கும் தெரியும்.
எனது 1 ஆவது கேள்வி, எமது அமைச்சரவை அமைச்சர் மட்டக்களப்பில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி வருகை தந்திருந்தபோது வீதிகள் தொடர்பான பல முறைபாடுகளை நாம் அவரிடம் முன்வைத்திருந்தோம்.
எமது மாவட்டத்திலுள்ள பல வீதிகள் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானவை சிலது பிரதேச சபைக்கு சொந்தமானவை. ஆனால் நிதிகள் அனைத்தும் மத்திய அரசாங்கம் வைத்திருக்கிறது.
அவ்வாறாயின் மாகாண சபைக்கு கீழுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதாக இருப்பின் நாம் மத்திய அரசாங்கத்திடம் கோரவும் முடியாது. ஆனால் மாகாணத்திற்கான நிதிகளை வைத்துக் கொண்டு அந்த வேலைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்றும் தெரியாது. இது போன்ற பல வீதிகள் உள்ளன.
எனவே, உங்களது அமைச்சின் கீழ் மாகாணத்திற்கு குறிப்பிட்ட வீதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏதேனும் வழிகள் உள்ளனவா?
ஏனெனில் வக்கியல்ல வெள்ளாவெளிக்கு வரும் வீதி கடும் மோசமாக உள்ளது. ஒரு அம்பியூலன்ஸ் வண்டி கூட பயணிக்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாணத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஏதேனும் வழிகள் உள்ளனவா?
எனது 2 ஆவது கேள்வி, நீங்கள் சொன்னதற்கமைய மாகாணத்திற்கு இந்த வேலைத் திட்டங்களை செய்ய முடியாமைக்கு ஒரே ஒரு காரணம் நிதி இல்லாமை மாத்திரம்தான்.
தொழில்நுட்ப அறிவும், தொழில்நுட்ப பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கு உள்ளது. ஆனால் உங்களது பதிலை பார்க்கும்போது பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கான வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக செய்யப்போவதாக கூறுகின்றீர்கள். அதாவது மாகாணத்திற்கு அதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லை. ஆனால் இதனை செய்ய முடியாமைக்கு ஒரே காரணம் நிதி இல்லாமை மாத்திரமே. மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் செயல்பாடே இதற்கு கரணம்.
இந்த வருடம் ரூ. 14,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். வட மாகாணத்திற்கு ரூ. 1 பில்லியன் நிதிக்கான வீதி அபிவிருத்திகள் இடம்பெறப்போவதாக ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரையில் கூறப்பட்டது. ஆனால், தற்போது எனது கேள்வி என்னவென்றால், இந்த மாகாண சபை முறைமையை பலவீனமாக்கும் செயற்பாடுகள் எல்லா அமைச்சுகளும் தொடர்ச்சியாக மேற்கொள்வதாக தெரிகிறது.” என தெரிவித்தார்.
No comments:
Post a Comment