(எம்.வை.எம்.சியாம்)
இதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் நலன் கருதி பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை. எவ்வித முதலீடுகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. பாரியளவில் கடன்களை பெற்று திட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன் ஊடாக அவர்களது சுய அரசியல் இலாபங்களை மாத்திரமே ஈட்டிக்கொண்டனர். எனவே நாம் பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் நான் வழங்கத் தயாராக இருக்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.
களுத்துறை ஐக்கிய சந்தை மற்றும் கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் ஸ்தாபிக்கும் நிகழ்வு நேற்று (14) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இதன்போது களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, புதிய மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பலமான மக்கள் ஆணையை வழங்கி அரசாங்கமொன்றை ஸ்தாபித்துள்ளனர். இதனை பார்த்து நான் தனிப்பட்ட வகையில் மகிழ்சசியடைகிறேன்.
காரணம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் உள்ள எவருக்கும் கட்சி மாற வேண்டிய தேவை இருக்கிறது. அரச வரப்பிரசாதங்களுக்காக கட்சி தாவல் இடம்பெறாது.
எம் முன்னால் இருக்கும் சவால்கள் இலகுவானதல்ல. நாம் வங்குரோத்து அடைந்துள்ள நாடு. ஆனால் நாம் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையும் உருவாக்கும் பாரிய சவாலை பொறுப்பேற்றுள்ளோம். இதனை வார்த்தைகளால் இலகுவாக கூறி விடலாம். ஆனால் அதனை செயல் வடிவில் நடைமுறைப்படுத்துவது இலகுவானதல்ல.
நாம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும். வங்குரோத்து நிலையிலிருந்தும் சர்வதேச கடன் நெருக்கடியிலிருந்தும் மீண்டெழ வேண்டும்.
இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு அரசாங்கமும் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை. இதற்கு முன்னர் நாட்டை நிர்வகித்த அனைத்து கட்சிகளும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
எவ்வித முதலீடுகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. பாரியளவில் கடன்களை பெற்று திட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன் ஊடாக அவர்களது சுய அரசியல் இலபாங்களை ஈட்டிக் கொண்டனர். எனவே அவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது.
இந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பிரதான கட்சி ஒன்றில் போட்டியிட்டு பாராளுமன்றம் நுழைந்துள்ளேன். எனக்கு தனிப்பட்ட தேவை கிடையாது. என்னால் செய்ய முடியுமான பல விடயங்கள் உள்ளன. அதனை நான் செய்வேன். என்னிடம் வேலை வாங்குங்கள். என்னையும் உங்களின் திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் உள்ள அனுபவங்களை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment