நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் அறிமுகம் செய்தபோது நீங்களும், உங்கள் குடும்பமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு கல்முனை பிராந்தியத்தில் செய்த விடயங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை என கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் கல்முனை கூட்டத்தில் நிகழ்த்திய உரைக்கு பதிலளிக்கும் வகையில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், மரணித்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்கு நீங்கள் கொடுத்த துயரங்களை மக்கள் மறக்கவில்லை. பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் போராளிகளை சிறைக்கு அனுப்பியதை, சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு, அதில் பறிக்கப்பட்ட உயிர்கள் போன்றவற்றையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஆதரவானவர்களின் பொருளாதார நிலையங்களை அழித்தது, அரச உத்தியோகத்தர்களை அரசியல் பழிவாங்கி, இடமாற்றம் கொடுத்தது என உங்களால் செய்யப்பட்ட பழிவாங்கல்கள் ஏராளம், ஏராளம்.
கல்முனை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக 1989 இல் ஒட்டு மொத்த கல்முனை மக்களையும் பழிவாங்கும் விதமாக நீங்களும், உங்கள் குடும்பமும் கல்முனை உப பிரதேச செயலகத்தை உருவாக்கி தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்து முஸ்லிம்களை பழிவாங்கி வஞ்சம் தீர்த்தீர்கள்.
அதனால் இந்த மக்கள் இன்று தனது மண்ணை இழக்கும் அபாயத்தில் நீதிமன்றத்தில் கல்முனை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணுக்காக மரணிப்பேன் என்று கூறியுள்ள உங்களுக்கு இதனை செய்தது உறுத்தவில்லையா?
நீங்கள் நட்புறவுடன் பழகும் தமிழர்களுக்கு பயந்து கல்முனை விடயம் தொடர்பாக நீதிமன்றில் இருந்த வழக்கில் கூட நீங்கள் வழக்காளியாக மாறாமல், அந்த வழக்கில் கல்முனை முஸ்லிம் தரப்புக்கு எவ்வித உதவிகளையும் கூட வழங்கமால் விட்டீர்கள். இது உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
கல்முனை மண்ணின் விடியலுக்காக கல்முனை மாநகர பிரதி முதல்வராக இருந்தும் ஒரு பிரேரணையை கூட கொண்டுவர முடியாத நீங்கள் மண்ணுக்காக மரணிக்கப் போவதாக அலறுவது அபத்தமாக உள்ளது. இதுதான் இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிபோல பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் 2002 இல் கட்சியில் புதிதாக சேர்ந்தபோது ஒத்திவைக்கப்பட்ட கல்முனை மாநகர சபை தேர்தலில் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டும் பின்னர் ஓரிரு மாதங்களில் 2003 இல் பதவியாசை கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்றீர்கள். அதன் பின்னர் 2011 இல் மாநகர சபையில் வேட்பாளர் நியமனம் கோரி மீள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டீர்கள்.
இப்படி பதவியாசை கொண்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்த நீங்கள் கட்சியை காப்பாற்றப் போவதாக கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம். இதுவும் இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாகவே இருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளி என்று அடையாளப்படுத்தவே தகுதியில்லாத நீங்கள் தயவுசெய்து ஆரம்பகால போராளிகளான எங்களின் மனதில் வேதனையையும், ஆத்திரத்தையும் உருவாக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மட்டுமின்றி இது தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment