ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானம் : வீட்டுச் சின்னத்திலிருந்து வெளியேறி வெற்றி பெற்ற முதலாவது நபர் நான்தான் - வியாழேந்திரன் - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, October 17, 2024

demo-image

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானம் : வீட்டுச் சின்னத்திலிருந்து வெளியேறி வெற்றி பெற்ற முதலாவது நபர் நான்தான் - வியாழேந்திரன்

1725199588-election_2
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வியாழேந்திரன், கிழக்கு மாகாணத்தில் வலிமையான ஒரு அரசியல் கட்டமைப்பினால்தான் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்க முடியும் என்ற அடிப்படை தத்துவத்துடனேயே 2018ஆம் ஆண்டு முற்போக்கு தமிழர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரையில் அந்த நோக்கத்தினை கருத்தில் கொண்டே செயற்பட்டு வருகின்றோம்.

தேவையற்ற விமர்சனங்களைப் புறந்தள்ளி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு செயற்பட்டு வந்ததன் காரணமாக இரண்டு தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

அந்த வகையில் நாங்கள் எதிர்கொண்ட மூன்றாவது தேர்தல் இந்த பாராளுமன்றத் தேர்தல். இந்த பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் களம் காணயிருந்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இலங்கையில் 70 க்கும் அதிகமான கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக நாங்கள் போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணியினுடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. காரணம் எங்களது பலமான கட்டமைப்பு. அந்த கட்டமைப்பில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிக்கின்ற கழக உடன்பிறப்புகள். சிறு விடயம் கவனத்தில் கொள்ளாததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆளும் பெரும்பான்மை கட்சியில் எட்டு தமிழர்களை மட்டக்களப்பில் களமிறக்கியவர்கள் நாங்கள். அதில் நாங்கள் வெற்றியும் கண்டோம். பெரும்பான்மை கட்சிகளில் குறிப்பாக மூவினங்களையும் சார்ந்தவர்கள் இணைந்து செயற்படுவார்கள். கடந்த காலத்தில் எம்மவர்கள் சேர்க்கும் வாக்கில் எம்மவர்கள் வெற்றி பெறுவதில்லை. ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள். அதுவே மட்டக்களப்பின் வரலாறு. அந்த வரலாற்றினை முதன்முறையாக உடைத்தவர்கள் நாங்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெற்று அதிலிருந்து வெளியேறி வேறு கட்சியில் கேட்டு வெற்றி பெற்றதாக எந்த சரித்திரமும் இல்லை. ஆனால் வீட்டுச் சின்னத்திலிருந்து வெளியேறி வெற்றி பெற்ற முதலாவது நபர் நான்தான். அதுவொரு வரலாற்றுப் பதிவு. வீட்டுச் சின்னம் இல்லாமல் அரச கட்சியில் கடந்த காலத்தில் போட்டியிட்டு போட்டியிட்டு தோல்வி கண்டவர்களே வீட்டில் கேட்டு வெற்றி பெற்றார்கள்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் நாங்கள் களமிறங்குவோம். இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இல்லாத இடைவெளியும் உணரப்படும்.

தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான நீதியான தரப்பட வேண்டிய விடயங்களைப் பற்றியே நாங்கள் பேசுவோம். இனவிகிதாசாரப்படி நான்கு தமிழ் பிரதிநிதிகள் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் ஒரு தமிழ் கட்சிக்கு ஆதரவினை வழங்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம். கழக உறுப்பினர்களின் அனைவரது கருத்தினையும் எடுத்து ஒரு தீர்மானத்தினை எடுத்திருக்கின்றோம்.

இந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முற்போக்கு தமிழர் கழகமானது முழுமையாக எங்களது ஆதரவினை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

நாங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு எங்களது ஆதரவினை வழங்கவில்லை. சங்கு சின்னத்தில் அவர்கள் களமிறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். தமிழ் பிரதிநிதித்துவத்தினை பாதுகாப்பதற்காக தயவுசெய்து முழுமையான ஆதரவினை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *