இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியதை அடுத்து இலங்கையின் ஆறு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் டெஸ்ட் தரவரிசையில் தனது சிறந்த தரநிலையை பெற்றுள்ளனர்.
அண்மையில் முடிவுற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 ஆண்டுகளின் பின்னரே இங்கிலாந்தை தோற்கடித்தது. இதன்போது அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா, பத்தும் நிசங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதில் முதல் இன்னிங்ஸில் 69 ஓட்டங்களைப் பெற்ற தனஞ்சய டி சில்வா டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையாக 13 ஆவது இடத்தைப் பிடித்தார்.
இந்த டெஸ்டில் சதம் பெற்ற நிசங்க மற்றும் மெண்டிஸ் ஆகியோரும் சிறந்த தரநிலையை பெற்றுள்ளனர். அரைச்சதம் பெற்ற கமிந்து மெண்டிஸ் ஆறு இடங்கள் முன்னேறி 19 ஆவது இடத்தைப் பெற்றதோடு பத்தும் நிசங்க 42 இடங்கள் பாய்ச்சலைக் கண்டு 39 ஆவது இடத்தைப் பிடித்தார்.
அதேபோன்று இலங்கையின் மேலும் மூன்று வீரர்கள் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளனர்.
ஓவல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய விஷ்வ பெர்னாண்டோ 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 31 ஆவது இடத்தைப் பிடித்தார்.
சக வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார 10 இடங்கள் ஏற்றம் கண்டு 32 ஆவது இடத்தைப் பிடித்ததோடு மிலான் ரத்னாயக்க 26 இடங்கள் முன்னேறி 84 ஆவது இடத்தைப் பிடித்தார்.
No comments:
Post a Comment