(எம்.ஆர்.எம்.வசீம்)
வீழ்ச்சியடைந்த நாட்டை தைரியமாக பொறுப்பெடுத்து தன்னால் முடியும் என்பதை செயலில் காட்டிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க. அதனால் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கவே அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தேன். அனுராதபுரம் மக்கள் கட்சியை பார்த்து எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் எந்த கட்சியில் போட்டியிட்டாலும் மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்ட அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு வீழ்ச்சியடைந்திருந்தபோது, நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. நாட்டை பொறுப்பேற்றால் எதிர்காலத்தில் அரசியல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும் என அஞ்சி எதிர்க்கட்சிகள் பின்வாங்கின. பாராளுமன்றத்தில் அனைவரும் தங்களின் எதிர்காலத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்பட்டபோது ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாட்டை பொறுப்பேற்றார்.
ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்கும்போது விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கும் உரம் கிடைக்கவில்லை. ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்ள பல நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து வரிசையில் காத்துக் கொண்டிருக்க வேண்டி ஏற்பட்டது.
அதேபோன்று எரிபொருள், எரிவாயு பெற்றுக் கொள்ள நாட்டு மக்கள் பல நாட்கள் வரிசையில் இருந்தே பெற்றுக் கொண்டனர். மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இந்த நிலையை ரணில் விக்ரமசிங்க மாற்றியமைத்துள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தற்போது தாராளமாக இருக்கின்றன.
அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டு நிதியில், அனுராதபுரம் மாவட்டத்தில் அபிவிருத்தி செய்ய பல மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனக்கு வழங்கினார். அதன் மூலம் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்க முடியுமாகியது.
நாடு வங்குராேத்து அடைந்திருந்த நிலையில் கிராமங்களின் அபிவிருத்திக்கு பணம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நினைக்கவில்லை. அதனால் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், எமது மக்களின் கோரிக்கைக்கு அமைய ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்தேன்.
அத்துடன் நான் எமது மாவட்டத்துக்கு பல பணிகளை செய்துள்ளேன். அதனால்தான் கடந்த பொதுத் தேர்தலில் எனது மாவட்டத்தில் நான் முதலாம் இடத்துக்கு வந்தேன். சகல இன மக்களின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. அனுராதபுரம் மாவட்ட மக்கள் கட்சியை பாரத்து எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் நான் எந்த கட்சியில் போட்டியிட்டாலும் எமது மக்களின் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment