21 நாட்களுக்குள் செலவின விபரத்திரட்டு ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் - தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 20, 2024

21 நாட்களுக்குள் செலவின விபரத்திரட்டு ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் - தேர்தல் ஆணைக்குழு

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவுக்கு மேற்படாத தொகையை தேர்தல் பிரச்சார செலவினமாக செலவிட முடியும். இதற்கமைய வேட்பாளர் ஒருவர் 186 கோடி வரை செலவிட முடியும். தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் செலவினம் தொடர்பான விபரத்திரட்டு ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தி ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்தல் வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டத்துக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோரிடம் 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் 03 ஆம் பிரிவுக்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் கலந்துரையாடியது.

2024.09.21 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவிட வேண்டிய செலவின எல்லைகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.

போட்டியிடும் வேட்பாளர் ஒவ்வொருவரும் செல்லுபடியான தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டடுள்ள வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவுக்கு மேற்படாத தொகையை தேர்தல் பிரச்சார செலவினமாக செலவிட முடியும்.

இதற்கமைய செலவிடக்கூடிய ஆகக்கூடிய செலவின எல்லை 1,868,298,586.00 (நூற்று என்பத்தாறு கோடி என்பத்திரெண்டு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரத்து ஐந்நூற்று என்பத்தாறு ரூபாய்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போட்டியிடுகின்ற வேட்பாளரொருவருக்கு குறித்த தொகையில் 60 சதவீதத்தை இல்லையேல் 1,120,979,151.60 ( நூற்றுப் பன்னிரெண்டு கோடி ஒன்பது இலட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து நூற்று ஐம்பத்தொரு ரூபா அறுபது சதம்) தொகையை தமது பிரச்சார செலவினமாக செலவிட முடியும்.

அதேபோல் அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை அல்லது வேறு அரசியல் கட்சியை அல்லது வேட்பாளரொருவரை பெயர் குறித்து நியமித்த தேருநருக்கு சொல்லப்பட்ட தொகையில் 40 சதவீதத்தை இல்லையேல் 747,319,434.40 (எழுபத்து நான்கு கோடி எழுபத்து மூன்று இலட்சத்து பத்தொன்பதாயிரத்து நானூற்று முப்பத்து நான்கு ரூபா நாற்பது சதம்) தொகையை ஒவ்வொரு வேட்பாளரின் பிரச்சார நடவடிக்கைக்கும் அக்கட்சியின் செயலாளருக்கு அல்லது தேருநருக்கு செலவிட முடியும்.

தேர்தல் பிரச்சார செலவினங்கள் அடங்கிய செலவின விபர ஆவண பதிவேட்டை தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் குறித்த போட்டியிட்ட வேட்பாளர்கள் வெவ்வேறாக தயாரித்து வேட்பாளரின் கையொப்பத்துடன் சத்திப்பிரமாண ஆணையாளரினால் அல்லது சமாதான நீதவானினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்தல் வேண்டும்.

செலவின விபர ஆவணப்பதிவேட்டில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சார்பாக பெறப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட நன்கொடைகள் அல்லது உதவு தொகைகள் அத்துடன் அத்தகைய நன்கொடைகள் அல்லது உதவுத் தொகைகள் பொருளாகவிருப்பின் அவற்றின் மதிப்பிடப்பட்ட பெறுமதியும், குறித்த கொடை, கடன் முற்பணம் அல்லது வைப்பு என்ற அடிப்படையில் அன்பளிப்பு செய்யப்பட்டதா, அத்தகைய நன்கொடைகளை உதவுத் தொகைகளை அளிக்கின்றன தனி நபரின் அல்லது கூட்டிணைக்கப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்படாத ஆட்கள் குழுவின் பெயர், முகவர், தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட வரி செலுத்துநரை அடையாளம் காணும் இலக்கம் (இலக்கம்) அல்லது பதிவு இலக்கம் ஆகிய தகவல்களையும் உள்ளடக்குதல் வேண்டும்.

அத்துடன் எந்த ஊடகத்தின் அல்லது வேறு வகையிலான நடவடிக்கைகள் தொடர்பான செலவுகள் (விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்கள், கொடிகள், பதாதைகள், சித்திரங்கள், அறிவித்தல்கள், சுவரொட்டிகள் முதலிய, வானொலியில் அல்லது தொலைக்காட்சியில் ஒலிப்பரப்புதல்,

செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், சமூக ஊடகங்கள்,

எண்ணிமமுறைமையிலான (டிஜிட்டல்) விளம்பர பலகைகள் அல்லது வேறேதேனும் எண்ணிம முறைமையிலான ஊடகத்தில் அல்லது வேறு வெளிப்படுத்துகைகள் உள்ளிட்ட விபரங்களையும் உள்ளடக்குதல் வேண்டும். அத்துடன் வாகன பாவனைக்கான எரிபொருள் வழங்கல் தொடர்பான உறுதிப்படுத்தப்படக் கூடிய விபரங்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.

வேட்பாளரின் போக்கவரத்து நடவடிக்கைகள், எழுதுகருவிகள், தொலைபேசிகள், அல்லது வேறு வகையிலான தொடர்பாடல் நடவடிக்கைகளுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகளை செலவின விபரத்திரட்டில் உள்ளடக்கலாகாது.

போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த காலப்பகுதிக்குள் விபரத்திரட்டை சமர்ப்பிக்காதவிடத்து அல்லது பொய்யான தகவல்களை சமர்ப்பிப்பாராயின் சட்டத்துக்கு முரணான தவறொன்றை புரிந்துள்ளார் என்று கருதப்படுவார். 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தினால் குறித்துரைக்கப்பட்ட தண்டனைக்கு அவர் உள்ளாகுவார்.

No comments:

Post a Comment