நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்க விரும்பும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அதனை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றனர் என்ற திட்டத்தை முன்வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இல்லையென்றால் தெளிவான திட்டம் இல்லாத தெளிவற்ற வாக்குறுதிகளால் வாக்காளர்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் புதிய வேண்டுகோள்களும் வாக்குறுதிகளும் வெளியாகியுள்ளன. இது கடந்த காலங்களில் வழங்கப்பட்ட ஆனால் ஒருபோதும் நிறைவேற்றப்படாத வாக்குறுதி.
சந்திரிக்கா குமாரதுங்க போன்ற தலைவர்கள் தங்களி;ன் பதவிக் காலம் முடிவடையும் வரை இதனை பிற்போட்டனர். அதேவேளை மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாகவே தான் நிறைவேற்றதிகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
உண்மையான நிலவரம் என்னவென்றால் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது எங்களின் அரசமைப்பின் சில பிரிவுகளின் மீது நேரடியாக தாக்கத்தை செலுத்துகின்றது.
சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் இந்த மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. இது வெறுமனே அரசியல் உறுதிப்பாட்டுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை, இது அரசியலமைப்பு தேவை.
ஆகவே நீங்கள் இந்த வாக்குறுதி குறித்து உண்மையான அர்ப்பணிப்பை கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நாங்கள் பிரத்யேகங்களை பற்றி பேசுவோம். இது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு எப்போது இடம்பெறும்? உங்களின் பதவிக் காலம் முடிவடைந்த பின்னரே இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா?
இலங்கை மக்களுக்கு காலக்கெடு மற்றும் செயல்முறை பற்றிய தெளிவான விடயங்கள் அவசியம். நமது ஜனநாயகம் வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையால் செழிப்படைகின்றது.
நிறைவேற்றதிகார முறை நீக்கம் என்ற மாற்றத்தை நீங்கள் உண்மையிலேயே செய்ய விரும்பினால் அதனை எவ்வாறு முன்னெடுக்க விரும்புகின்றீர்கள் என்ற வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது உங்கள் கடமை. இல்லையென்றால் தெளிவான திட்டம் இல்லாத தெளிவற்ற வாக்குறுதிகளால் வாக்காளர்களை குழப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment