காலந்தாழ்த்துவது சமூக அமைதிக்கும், நாட்டின் நன்மதிப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2024

காலந்தாழ்த்துவது சமூக அமைதிக்கும், நாட்டின் நன்மதிப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் - கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி உரிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், மாறாக அதனை காலந்தாழ்த்துவது சமூக அமைதிக்கும், நாட்டின் நன்மதிப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் எனவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையினால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அரசியலமைப்பில் அத்திருத்தத்தை மேற்கொள்வதற்கான உடனடித் தேவை தற்போது இல்லை எனவும் சட்டத்தரணிகள் கூட்டிணைவு, சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றி உரிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

மாறாக, ஜனாதிபதித் தேர்தலைக் காலந்தாழ்த்துவதானது சமூக அமைதிக்கும், இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நன்மதிப்புக்கும் குந்தகம் விளைவிப்பதாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வன்முறைகளோ, குழப்பங்களோ அற்ற சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் எக்ஸ் தளப்பதிவை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றை செய்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, அரசியலமைப்பின் ஊடாக வரையறுக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகக் கோட்பாடுகளை முழுமையாக மீறுவதாகவே அமையும் எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ஜனநாயகத்தைப் புறந்தள்ளுவதற்கு முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்குமாறும், இலங்கை மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறும் அவர் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment