(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியல் தீர்வுகளை பெறுவதற்கு நாட்டில் அதிகமான தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. அதனால் மக்கள் இந்த இறுதி சந்தர்ப்பத்தை இழந்துவிடக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சி உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி வலய பெண் பிரதிநிதிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என தெரிவித்து, வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாரிய கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பதுளை, கண்டி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் உரையாற்றிய அனைவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்தனர். இதுதான் மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
எமது கட்சி தலைவர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தெரிவித்து வருகிறோம். எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ரணில் விக்ரமசிங்க இன்னும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அந்த அறிவிப்பை வெளியிடுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்னும் அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில் இரண்டு கட்சிகள் பாரிய தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் கூட்டங்களுக்கு மக்கள் அதிகமாக சேர்வது தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
பிரசார கூட்டங்களுக்கு அதிகமான மக்கள் வருகிறார்கள் என்பதை கண்டு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என நினைக்க முடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் காலி முகத்திடல் நிரம்ப மக்களை அழைத்து வந்தோம். ஆனால் எங்களுக்கு தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கிராமங்களில் இவ்வாறான தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை.
மேலும், எமது நாட்டில் அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்க அதிகமான தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே முடியும். அதற்கான அனுபவமும் திறமையும் ரணில் விக்ரமசிங்கவிடம் மாத்திரமே இருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலையையும் தற்போது நாட்டின் பொருளாதார நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மக்களுக்கு உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும். அதற்கு காரணமாவர் யார் என்பதையும் மக்களால் புரிந்துகொள்ள முடியும். அதனால் மக்கள் இந்த இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடாது ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment