ஊடக நிறுவன பிரதானி என்பதற்காக ஜனாதிபதியாக முடியாது : நான் என்ன செய்தேன் என்பதற்கு மாணவர்கள் பதிலளிப்பார்கள் - கல்வி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Friday, July 12, 2024

ஊடக நிறுவன பிரதானி என்பதற்காக ஜனாதிபதியாக முடியாது : நான் என்ன செய்தேன் என்பதற்கு மாணவர்கள் பதிலளிப்பார்கள் - கல்வி அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஊடக நிறுவனத்தின் பிரதானி என்பதற்காக ஜனாதிபதியாக முடியாது. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்ட விதத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டாம். தனியார் தொலைக்காட்சியைப் பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழையுங்கள் என சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அமர்வின்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, தனியார் தொலைக்காட்சியின் காலை நேர நிகழ்ச்சியில் சபையில் நான் குறிப்பிடாத பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் பிரதானி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதால் எம்மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது.

கல்வி அமைச்சராக நான் என்ன செய்தேன் என்று இந்த நிகழ்ச்சியின்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில்தான் நான் கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளேன். யுத்த காலத்தில் கூட பரீட்சைகள் முறையாக நடத்துவதற்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளேன். யுத்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய பரீட்சைகள் முறையாக நடத்தப்பட்டன.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது கல்வி அமைச்சராகப் பதவியேற்றேன். பல்வேறு தரப்பினரது ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு சீருடைகளையும், பாடப் புத்தகங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளேன். கல்வி அமைச்சராக நான் என்ன செய்தேன் என்பதற்குப் பாடசாலை மாணவர்கள் பதிலளிப்பார்கள்.

இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதானி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மஹிந்த சுழங்கவை மீண்டும் புதுப்பிப்பதாக இவர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்காக காலையில் கூட்டணியமைத்தார்கள் மாலை அவரது கட்சியின் தலைவர் பதவி விலகினார். இவ்வாறுதான் இவர்களின் அரசியல் நிலைமை காணப்படுகிறது.

இவரது அரசியல் பிரசாரத்துக்காக எம்மை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தனியார் நிறுவனம் கடந்த காலங்களில் எவ்வாறு அரச தலைவருக்கு கயிறு கொடுத்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே இந்த நிறுவனத்தை சிறப்புரிமை குழுவுக்கு அழையுங்கள் என்றார்.

No comments:

Post a Comment