(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இன அடிப்படையில் எமது நாட்டில் கட்சிகள் இருக்கும்வரை நாட்டில் ஜனநாயகம் தலைதூக்க முடியாது. அதனால் ஜனநாயகம் தலைதூக்க வேண்டுமானால் இனவாத முறையில் கட்சி அமைப்பதை தடை செய்ய வேண்டும். அதற்குத் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) மதத் தீவிரவாதத்தினை தடுப்பதன் அவசியம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே கொண்டுவந்த தனி நபர் பிரேரணை மீதி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அடிப்படைவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் அதனைத் தடுப்பது பாராளுமன்றத்தின் கடமை. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஐ,எஸ். தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயங்கள் தொடர்பாக அன்று இருந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்காது.
இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் இவை அனைத்தும் அரசியலுடன் ஒன்றிப்பிணைந்துள்ளன. இந்த முறைமை பிரித்தானியர் காலத்திலேயே எமக்கு விட்டுச் சென்றார்கள். தேர்தல் முறைமையே இதற்குக் காரணமாகும்.
இன அடிப்படையில் எமது நாட்டில் கட்சிகள் இருக்கும்வரை நாட்டில் ஜனநாயகம் தலைதூக்க முடியாது. அதனால் ஜனநாயகம் தலைதூக்க வேண்டுமானால் இனவாத முறையில் கட்சி அமைப்பதைத் தடை செய்ய வேண்டும். அதற்குத் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
எமது அண்டை நாடான இந்தியாவில் இனவாத மதவாத அடிப்படையில் கட்சிகள் இல்லை. அந்த முறையில் எமக்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜனநாயக நாடுகளில் இவ்வாறான முறைமைகள் இல்லை.
எமது நாட்டிலிருந்த ஆட்சியாளர்கள் அடிக்கடி அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளும்போது தங்களின் அல்லது அவர்களின் கட்சியின் நலனுக்காக இந்த இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கு இடமளித்தே அதனை மேற்கொண்டுள்ளனர். அதனால் அடிப்படைவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது.
அதனால் இனவாத மதவாதத்துக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவருவதுடன் முடித்துக்கொள்ளாமல் இதற்கு எதிராகத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களால் முடிந்த அர்ப்பணிப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல்வேறு விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறன. என்றாலும் பாதிக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அதேநேரம் இந்த தாக்குதல் தொடர்பில் இன்னும் ஒரு சில தரப்பினருக்குச் சந்தேகம் இருந்து வருகிறது. என்றாலும் இவ்வாறு சந்தேகங்களை வைத்திருப்பது பயங்கரமான விடயமாகும். சமூகத்தில் இவ்வாறு சந்தேகம் இருப்பது, அது எந்த வகையில் வெளிப்படும் என்பது தெரியாது. அதனால் தாக்குதல் தொடர்பில் ஏதாவது ஆதாரங்கள் இருக்குமானால் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதே யோக்கியமாகும்.
அதேபோன்று இனவாத மதவாத அடிப்படைவாதிகளை புனர்வாழ்வளிக்க நான் 2022 இல் புனர்வாழ்வு சட்டமூலம் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக எதிரக்கட்சிகள் அனைத்தும் எனக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
போராட்டக்காரர்களை புனர்வாழ்வு அளிப்பதற்கே இந்த சட்டம் கொண்டுவருவதாக தெரிவித்து இதனை தடுத்தார்கள். அன்று இந்த சட்டத்தை அவ்வாறே கொண்டுவர இடமளித்திருந்தால், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு இன்று இந்த பிரேரணையை கொண்டுவர தேவை ஏற்பட்டிருக்காது. அதற்காக எதிர்கட்சி உறுப்பினர்கள் இதற்காக என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
எனவே மீண்டும் இந்த புனர்வாழ்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுவந்து இனவாத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை புனல்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment