(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை மிக விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவைப் புதன்கிழமை (17) இராஜகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை எந்தளவு விரைவாக நடத்த முடியுமோ அந்தளவு விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகவே போட்டியிட இருக்கிறார். அதில் அனைவருக்கும் கலந்துகொள்ள முடியும்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியோ, தேசிய மக்கள் சக்தியோ எந்த வகையிலும் சவால் இல்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் விரைவாக தேர்தல் தோல்வியை பொறுப்பேற்க இருக்கின்றன. அதனாலே நாங்கள் விரைவாக தேர்தலை நடத்துமாறு தெரிவிக்க இங்கு வந்தோம்.
இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று சாதனை வாக்குகளை பெற்றுக்கொண்டு வெற்றி பெறுவார். அதில் சந்தேகம் இல்லை.
தேர்தலை பிற்போடுவதற்கு நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலை பிற்போடுமாறு நீதிமன்றில் மனு தாக்கல் செய்தது எதிர்க்கட்சித் தலைவருடன் இருப்பவராகும். சதித்திட்டம் மேற்கொண்டு ரணில் விக்ரமசிங்க நெருக்கடிக்குள்ளாகவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு மக்கள் ஏமாறப்போவதில்லை.
தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவித்ததுடன் நாங்கள் எமது வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம். என்றாலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என நாங்கள் அவரை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.'
No comments:
Post a Comment