டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 13, 2024

டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கி ரவை பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 150 யார் தூரத்தில் எதிர்முனையில் உள்ள கட்டடமொன்றின் கூரையிலிருந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட துப்பாக்கிதாரியை அமெரிக்க இரகசிய சேவை பாதுகாப்புப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ட்ரம்ப் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெறும் முன், இந்த மர்ம நபர் தொடர்பில் அங்கிருந்த சிலர் பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தியதாகவும், அதை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் குறித்த மர்ம நபரை மற்றுமொரு கூரையிலிருந்த பாதுகாப்புப் பிரிவினர் இலக்கு வைத்த வண்ணம் இருப்பதை வீடியோ காட்சியொன்று காண்பிக்கின்றது.

இதேவேளை குறித்த சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை எனவும், இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், ட்ரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி ஜனாதிபதி ஜோ பைடனின் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment