எந்தவொரு நாடும் படிப்படியாக முன்னேற வேண்டுமானால், அதற்கு சக்தி வாய்ந்த ஒரு தலைவர் தேவை. அவ்வாறானதொரு தலைவர் ஆரம்பித்த நல்ல பணிகளைத் தொடர கால அவகாசமும் அவருக்கு வேண்டுமென அதானி எனர்ஜி சொலியூஷன் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் அனில் சர்தானா தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின் வழங்கல் நிறுவனமான அதானி எனர்ஜி சொலியூஷன் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் அனில் சர்தானாவை அஹமதாபாத்தில் தினகரன் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
உலகின் சிறிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்து 2030 க்குள் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு பிரதமர் மோடியின் தலைமைத்துவம் முக்கியமானதென்றும் அவர் மேலும் கூறினார்.
ஒரு தலைவரைத் தொடர்ச்சியாக ஆள அனுமதிக்கும்போது, அவரது சிறந்த கொள்கைகள் தடையின்றி தொடருமென்பது உறுதியாவதால் நாடு வேகமாக முன்னேறும் என்றும் அவர் கூறினார்.
தலைவர்கள் மக்கள் விரும்பாத முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றும், அது இந்தியாவிலும் நடந்ததாகவும் அவர் கூறினார். இந்திய ரூபாயின் பண மதிப்பிறக்கம் அதற்கான ஒரு எடுத்துக்காட்டென கூறிய அவர், சிலர் அதனை விமர்சித்தாலும் கூட, நீண்ட கால அடிப்படையில் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இலங்கையில் அதானியின் முதலீடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், மீள் புதுப்பிக்கப்பட்ட சக்தி (Renewable energy) (காற்றாலை Wind Power Project) துறையில் முதலீடு செய்வதாகவும், பூநகரி மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் 01 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும், துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் துறைமுக விஸ்தரிப்பிலும் முதலீடு செய்வதாகவும் கூறினார்.
மேற்கு கொள்கலன் முனைய முதலீடுகளுக்கான ஆதரவு அதிகளவில் இருந்தபோதும், புதுப்பிக்கத்தக்க சக்தி (Renewable energy) துறையில் அதிகாரிகள் மட்டத்தில் தங்களது முதலீட்டுக்கான ஆதரவு போதியளவில் இல்லையென்றும் அவர் கூறினார்.
அதிக செலவு செய்யும் புதைபடிவ எரிபொருட்களில் இலங்கை தனது சக்தி வலுத் தேவைகளுக்காகச் சார்ந்திருக்க வேண்டும் என்று சில அதிகாரிகள் எண்ணுவதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறுனார்.
இந்த எதிர்மறையான, கடினமான, சமரசமற்ற மனப்பான்மையால் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக இலங்கையின் மின் பாவனையாளர் அதிக மின் கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment