பாராளுமன்றத்தை 25 ஆண்டுகளுக்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஓய்வு பெற வேண்டும் - ஐக்கிய நூற்றாண்டு முன்னணி - News View

About Us

About Us

Breaking

Saturday, July 13, 2024

பாராளுமன்றத்தை 25 ஆண்டுகளுக்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஓய்வு பெற வேண்டும் - ஐக்கிய நூற்றாண்டு முன்னணி

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் நாட்டுக்காக எதனை செய்துள்ளார்கள். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்களா அல்லது தங்களின் குடும்ப அபிவிருத்திக்காக அங்கம் வகிக்கிறார்களா? இவர்களால் இனி ஏதும் முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆகவே இவர்கள் கௌரவமான முறையில் ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசாத் தி விஸர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நூற்றாண்டு முன்னணி காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை அரச சேவையாக நினைத்துக் கொள்கிறார்கள். இறக்கும் வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகிறார்கள். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்களா?அல்லது தமது குடும்ப அபிவிருத்திக்காக அங்கம் வகிக்கிறார்களா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 75 வயது. இவர் 42 ஆண்டுகள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில்தான் சிவில் யுத்தம் இடம்பெற்றது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. 42 வருடங்கள் ஒன்றும் செய்யவில்லை. இனியும் இவரால் எதனை சாதிக்க முடியும்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 78 வயது. இவர் 39 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்ததன் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் முறைமையை இவர் தோற்றுவித்தார். உலகில் வேறெந்த நாடுகளிலும் இவ்வாறான நிலை கிடையாது. நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 72 வயது. இவர் 39 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் இவர் செயற்பட்ட விதம் 2019ஆம் ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு மூல காரணியாக அமைந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு நாட்டுக்கு செய்யாத சேவையையா இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு செய்யப் போகிறார்?

பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் பெரும்பாலான உறுப்பினர்கள் 30 வருடங்களுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கிறார்கள். இவர்களால் இனி ஏதும் செய்ய முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

ஆகவே இவர்கள் நாட்டுக்காகவேனும் கௌரவமான முறையில் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும். அரசியல் கட்சிகள் இவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்க கூடாது. இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment