பணிக்கு திரும்பாதோர் விலகியதாக கருதப்படுவர் : புகையிரத பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது : முடிந்தால் செய்து காட்டுமாறு சவால் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2024

பணிக்கு திரும்பாதோர் விலகியதாக கருதப்படுவர் : புகையிரத பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது : முடிந்தால் செய்து காட்டுமாறு சவால்

புகையிரத சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நண்பகலுக்கு முன்னதாக பணிக்கு திரும்பவில்லையெனின், அவர்கள் பணியிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவர் என, புகையிரத திணைக்கள பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே அறிவித்தல் விடுத்திருந்தார்.

அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், தமது சேவையின்றி புகையிரத போக்குவரத்து சேவையை முன்னெடுத்து செல்ல முடியுமாயின் அதனை செய்து காட்டுமாறு சவால் விடுத்துள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, புகையிரத நிலைய அதிபர் ஒருவர் கூட இந்த கடிதங்களுக்கு பயப்படப்போவதில்லை. வீட்டில் இருக்கவும் நாம் தயார். எம் மீதான இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல தொழிற்சங்கங்கள் திரளும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்து தீர்வு தர வேண்டும். எமக்கும் வேறு வழியில்லை எனத் தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இன்று நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அந்தந்த அல்லது அருகில் உள்ள புகையிரத நிலையத்தில் பணிக்கு திரும்புமாறும், அவ்வாறு மேற்கொள்ளாது பணிப்புறக்கணிப்பில் தொடர்ந்தும் ஈடுபடும் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் எனவும் புகையிரத பதில் பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலிகே அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.

இதேவேளை, இன்று காலை முதல் அலுவலக புகையிரதங்கள் உள்ளிட்ட பெரும்பாலான புகையிரத சேவைகள் இடம்பெறாமை காரணமாக, பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment