சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது.
குறிப்பாக, வைத்தியசாலையில் கடமையாற்றி, தற்போது விடுமுறையில் உள்ள பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதனடிப்படையில், மேலதிக மின்பிறப்பாக்கியின் அவசியத்தை கருத்தில்கொண்டு வைத்தியசாலைக்கு தற்காலிக அடிப்படையில் அதனை பெற்றுக் கொடுப்பதாக கடந்த 07.07.2024 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதியளித்திருந்தார்.
அவ்வாக்குறுதிக்கமைய, 150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று தற்காலிக அடிப்படையில் இன்றையதினம் (10.07.2024) வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் Dr. கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது, நிரந்தர மின்பிறப்பாக்கியை பெற்று வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், அதற்கான அறையொன்றை (Generator Room) அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.
மின்பிறப்பாக்கி கையளிப்பு நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சாவகச்சேரி பிரதேச இணைப்பாளர் டுபாகரன், சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் வட்டாரப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாவகச்சேரி மக்களின் தேவையுணர்ந்து எனது வேண்டுகோளை ஏற்று இந்த மின்பிறப்பாக்கிக்கான அனுசரணை வழங்கிய அன்பர்களுக்கு சாவகச்சேரி மக்கள் சார்பிலும், என்சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment