அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துவிச்சக்கர வண்டியொன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் சற்றே விலக முற்பட்டுள்ளது. அவ்வேளையில் கார் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ரிஷாட் எம்.பி தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கருவலகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வீதியின் குறுக்கே வந்த துவிச்சக்கர வண்டியில் மோதாமல் இருக்க முயன்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின்போது காரில் பயணித்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எந்தவித காயங்களும் ஏற்படாத நிலையில் துவிச்சக்கர வண்டியின் ஓட்டுனருக்கு மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்த துவிச்சக்கர வண்டியின் ஓட்டுனர் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment