அரச சேவையாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நாட்டு மக்கள் இணக்கம் தெரிவிப்பார்களா? : நிதி இராஜாங்க அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2024

அரச சேவையாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நாட்டு மக்கள் இணக்கம் தெரிவிப்பார்களா? : நிதி இராஜாங்க அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரச சேவையாளர்களுக்கு மீண்டும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின், வருடாந்தம் 300 பில்லியன் ரூபாவை மேலதிகமாக ஒதுக்க வேண்டும். நாணயம் அச்சிடாமல் சம்பளத்தை அதிகரிப்பதாயின் வற் வரியை 22 சதவீதத்தாலும், நிறுவன வரியை 42 சதவீதத்தாலும் அதிகரிக்க வேண்டும். இதற்கு நாட்டு மக்கள் இணக்கம் தெரிவிப்பார்களா? என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ஒப்பீட்டளவில் தீர்வு கண்டுள்ள நிலையில் பொருளாதாரம் மீட்சி பெறவில்லை என்று குறிப்பிடுபவர்களின் உளவியலை ஆராய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைக்கும்போது ஊழியர் சேமலாப நிதியத்துக்கும், இதர நிதியங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்றதன் பின்னர் ஊழியர் சேமலாப நிதியத்துக்கான வட்டி வழங்கலை 12 அல்லது 13 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்தது. ஆகவே பொருளாதார விவகாரத்தில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்ததன் பின்னர் உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கின. ஆனால் துரதிர்ஷ்டவசமான எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்தனர். குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெற்றுள்ளது என சர்வதேசம் குறிப்பிட்டுள்ளமை நாட்டின் நிதி நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு மற்றும் வணிக கடன் வழங்குநர்களுடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டவுடன் சகல ஆவணங்களும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு எதனையும் நாங்கள் மறைக்கவில்லை. வெளிப்படையாக செயற்பட்டுள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சம்பள அதிகரிப்பு கோரி அரச சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் உள்ளார்கள். பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு 10000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது.

பொருளாதார மறுசீரமைப்புக்காக எடுத்த சீர்த்திருத்தங்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச சேவையாளர்கள் மீண்டும் சம்பள அதிகரிப்பு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது முற்றிலும் தவறானது. இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமாயின் வருடாந்தம் 275 பில்லியன் முதல் 300 பில்லியன் ரூபா வரையான நிதியை மேலதிகமாக ஒதுக்க வேண்டும்.

நாணயம் அச்சிடாமல் 300 பில்லியன் ரூபாவை எவ்வாறு திரட்டுவது, ஒன்று வற் வரியை 21 அல்லது 22 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும். அவ்வாறு அதிகரித்தால் வாழ்க்கைச் செலவுகள் மீண்டும் பன்மடங்கு அதிகரிக்கும் அல்லது நிறுவன வரியை 30 முதல் 42 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும். அவ்வாறு அதிகரித்தால் தனியார் தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடையும், தொழிலின்மை தீவிரமடையும். ஆகவே அரச சேவையாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நாட்டு மக்கள் இணக்கம் தெரிவிப்பார்களா என்பதை மக்களிடம் கேட்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment