சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் பாடகி சுஜீவா : துலான் சஞ்சுள நீதிமன்றில் 40 நிமிட இரகசிய வாக்குமூலம் : 8 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் பாடகி சுஜீவா : துலான் சஞ்சுள நீதிமன்றில் 40 நிமிட இரகசிய வாக்குமூலம் : 8 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர பெரேராவின் படுகொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே. சுஜீவா சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்தபோது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கே. சுஜீவா அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர், கட்டண வார்டில் சிகிச்சை பெற்று வந்ததோடு, தற்போது வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் நீதிமன்றில் வாக்குமூலம்
இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு துணையாக இருந்ததாக தெரிவிக்கப்படும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுள கடுவெல நேற்று (22) நீதிமன்றில் 40 நிமிட இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் உட்பட 8 சந்தேக நபர்களும் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த எட்டு சந்தேக நபர்களையும் ஒகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் சானிமா விஜேபண்டார நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.

அதுருகிரிய பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட “கிளப் வசந்த” என்ற சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் ஜூலை 8 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில், பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் 7 பேர் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 10ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதன்படி, சந்தேகநபர்கள் நேற்று மீண்டும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய சந்தேக நபரும் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை அத்துரிகிரிய பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடகி கே. சுஜீவாவிடம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

உயிரிழந்த கிளப் வசந்த மற்றும் பாடகி கே. சுஜீவாவின் கணவர் நயன வாசுல ஆகியோரின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் பொலிசார் இன்னும் கைது செய்யவில்லை என பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி நுவான் ஜயவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலதிகத் தகவல்களை வழங்கிய சட்டத்தரணி, பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல, ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம், பொலிஸாரின் தேவைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி, நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு தமது கட்சிக்காரரான துலான் சஞ்சுல விரும்புவதாக சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

சந்தேக நபரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கும்போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகள் குறித்து தெரிவித்த நீதவான், அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க இணங்கினால் மதிய இடைவேளையின் பின்னர் வாக்குமூலத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்படி, சந்தேகநபர் நேற்று பிற்பகல் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

சந்தேகநபர் சுமார் 40 நிமிடங்களுக்கு குறித்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 சந்தேக நபர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment