எதிர்வரும் சனிக்கிழமை (27) ஆரம்பமாகவுள்ள இலங்கை வந்துள்ள இந்தியா அணியுடனான T20 தொடரில் விளையாடுவதற்கு சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெனாண்டோ குறித்த அணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
குறித்த தொடருக்கான போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 27, 28, 30 ஆம் திகதிகளில் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஆறு மாத கால தலைமைப் பதவியை நிறைவு செய்த, வணிந்து ஹசரங்க இம்மாத ஆரம்பத்தில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சரித் அசலங்க ரி20 அணித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வருட ஆரம்பத்தில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் தலைவராக இருந்த வணிந்து ஹசரங்கவிற்கு போட்டித்தடை விதிக்கப்பட்ட நிலையில், சரித் அசலங்க இலங்கை அணிக்கு இரண்டு ரி20 போட்டிகளுக்கு தலைமை தாங்கினார்.
இதற்கு முன்னதாக அவர் இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான தலைவராகவும் பதவி வகித்துள்ளார்
அத்துடன், தற்போது இடம்பெற்று முடிந்த LPL 2024 தொடரின் சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணிக்கு சரித் அசலங்க தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் திசர பெரேரா அவ்வணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.
சந்திமால் மீண்டும் இணைப்பு
இதேவேளை 34 வயதான தினேஷ் சந்திமால் ரி20 அணியில் மீண்டும உள்வாங்கப்பட்டுள்ளார். அவர் இறுதியாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச T20 போட்டியில் விளையாடியிருந்தார். ஆயினும் நடந்த முடிந்த LPL 2024 இல் அவர் மிக அபாரமாக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அவர் 8 போட்டிகளில் விளையாடி 168.82 (S/R) (ஸ்ட்ரைக் ரேட்) நிகர ஓட்டங்களுடன் 287 ஓட்டங்களை பெற்றிருந்தார். அவரது வாழ்நாள் நிகர ஓட்டம் 123.03 என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடயம் அவரை அணியில் இணைப்பதற்கான காரணமாக அமைந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
சமிந்து விக்ரமசிங்க அறிமுகம்
இதேவேளை கண்டியைச் சேர்ந்த 21 வயதான சகல துறை ஆட்டக்காரரான சமிந்து விக்ரமசிங்க இத்தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார்.
இந்தியாவில் உள்ள MRF Pace Academy இல் பயிற்சி பெற்றுவரும் சமிந்து விக்ரமசிங்க, LPL 2024 இல் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், தெரிவுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
எட்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 131.91 ஓட்ட வேகத்துடன் 186 ஓட்டங்களை இத்தொடரில் பெற்றிருந்தார் . இதில் 2 அரைசதங்களுகம் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்துள்ள இந்திய அணி ஓகஸ்ட் 02, 04, 07ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறும் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
No comments:
Post a Comment