கொழும்பு 07, வார்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கர வண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (23) அதிகாலை 1.00 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு 119 அவசர அழைப்பு தொபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த முச்சக்கர வண்டிக்குள் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கர வண்டி தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய, அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது முச்சக்கர வண்டியை தான் தனது மைத்துனருக்கு வாடகைக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார என தெரியவந்துள்ளது.
அத்துருகிரிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அவர், பகலில் அலுமினிய உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, இரவில் வாடகை முச்சக்கர வண்டி செலுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் மார்பிலும் கழுத்திலும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட இரண்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கைக்கு அருகில் அவரது சடலம் வைக்கப்பட்டிருந்துள்ளதோடு, முச்சக்கர வண்டியின் பக்கவாட்டு கண்ணாடி ஒன்றும் உடைந்து வீதியில் கிடந்துள்ளது.
இக்கொலையைக் செய்தவர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த அப்பகுதியில் உள்ள CCTV கெமராக்களை சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.
குறித்த சடலம் நீதவான் பரிசோதனைக்கு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment