திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் இன்று சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர்.
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவர்களின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட விடயத்தில் மாணவர்களுக்கான பெறுபேறுகளை பெற்றுக் கொடுப்பதில் தொடர்ச்சியாக பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே இன்று 2024.06.15 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருகோணமலை சென்ஜோசப் கல்லூரியில் உயர்தரம் எழுதி பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவர்களையும் அவ்வேளை கடமையில் இருந்த அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்களையும் அழைத்த ஆளுனர் செந்தில் தொண்டமான், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொரு மாணவர்களும் 13 வருடங்கள் எதிர்பார்த்த கனவுகள், பெற்றார்களின் எதிர்பார்ப்புகள் இதில் அடங்கியுள்ளது என்றும் எதிர்காலத்தில் வர வேண்டிய சிறந்த கல்விமான்கள் இலங்கையின் உயர் பதவிகளில் வகிக்கக்கூடிய மாணவர்களும் இதில் இருப்பீர்கள் மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய கல்வி முன்னேற்றத்துக்கான முயற்சிகளை தொடருங்கள் உங்களுடைய இடைநிறுத்தப்பட்ட பெறுபேறுகளை விரைவாக வெளியிட ஏற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் என்ற அடிப்படையில் நானும் எனது முயற்சிகளை செய்து வருகின்றேன் என்றார்.
பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவர்கள் அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டவந்த மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கைகைள எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பெறுபெறுகளை வெளியிட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபும் ஆரம்பத்தில் இருந்து பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இதன்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர் செந்தில் தொண்டமான் இது தொடர்பாக பேசி விரைவாக பெறுபேறுகளை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்ட இவ்வாறான ஒரு விடயத்தில் மாணவர்களின் நலனுக்காக ஆளுநர் செந்தில் தொண்டமானின் மூலம் எடுக்கப்பட்ட இவ்வாறான முன்னெடுப்புகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா, திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ரவி, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் முகேஸ், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் முகம்மட் நௌபர், பரீட்சை கடமையை நேரத்தில் இருந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment