நாட்டில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக எதிர்வரும் 21ஆம் திகதி மற்றும் 22ஆம் திகதிகளில் புத்தளம் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்குமாறு வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் ஆளுனர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் மட்டுமன்றி வடமேல் மாகாணத்தின் சகல பிரதேசங்களிலும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து உடனுக்குடன் தகவல்களைச் சேகரிக்குமாறும், பாதிப்புற்ற பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கான வடமேல் மாகாணத்தின் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஒன்றிணைந்த பொறிமுறையின் அடிப்படையில் செயற்பட்டு, துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஆளுனர் நஸீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்.
நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி வசதிகளை மாகாண சபை நிதி மூலமாகப் பெற்றுத் தருவதாகவும் ஆளுனர் உறுதியளித்துள்ளார்.
தேவையேற்படும் பட்சத்தில் மத்திய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி நிதி என்பவற்றில் இருந்தும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுனர் நஸீர் அஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment