வான் வெளியில் விமானங்கள் பறப்பதற்கான தடை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 23, 2025

வான் வெளியில் விமானங்கள் பறப்பதற்கான தடை நீடிப்பு

இந்திய வான் வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் மாதம் 24  ஆம் திகதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான் வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. 

இதன் மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், இராணுவ விமானங்கள் உட்பட சொந்த அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை இருந்தது.

முதலில், மே மாதம் 24ஆம் திகதி வரை பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை, ஜூன் 24 வரை நீட்டிக்கப்பட்டது. மீண்டும், ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர மொஹோல், “இந்திய வான் வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வியூகம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

சர்வதேச நேரப்படி ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி 11.59 மணி வரை தடை நீட்டிக்கிறது. அதாவது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 24, காலை 5.30 மணி வரை தடை நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வெளியில் பறப்பதற்கான தடையை அந்நாடு நீட்டித்துள்ளது. 

சிந்து நீதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்ததை அடுத்து அந்நாடு இந்திய விமானங்கள் தங்கள் வான் வெளியில் பறக்க கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி தடை அறிவித்தது. 

பின்னர் அந்த தடை ஜூன் 24 வரையும், பின்னர் ஜூலை 24 வரையும் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு மாதம் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment