ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மத்திய காசா நகரான டெயிர் அல் பலாஹ் மீது இஸ்ரேலியப் படை முதல் முறையாக தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
காசாவில் தொடரும் உக்கிர தாக்குதல்களில் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 59,000 ஐ தாண்டி இருக்கும் நிலையிலேயே இஸ்ரேலிய டாங்கிகள் புதிய ஊடுருவலை ஆரம்பித்துள்ளன.
டெயிர் அல் பலாஹ் நகரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கு எட்டு வீடுகள் மற்றும் மூன்று பள்ளிவாசல்கள் மீது இடம்பெற்ற செல் குண்டு தாக்குதல்களில் குறைந்தது மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த நகரில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டு அடுத்த நாளான நேற்று இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
படைகளின் முன்னேற்றம் மற்றும் குண்டு வீச்சுகள் காரணமாக பல குடும்பங்களும் கான் யூனிஸ் நகருக்கு அருகே டெயிர் அல் பலாஹ்வின் கடற்கரை பகுதியை நோக்கி வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது.
கான் யூனிஸில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதலில் கூடாரம் ஒன்றில் தங்கி இருந்த ஆடவர் ஒருவர், அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசாவில் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் போரில் டெயிர் அல் பலாஹ்வில் இஸ்ரேலியப் படை இதுவரை பிரதான படை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதில்லை.
இங்கே உள்ளூர் மக்களுடன் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பி வழிகின்றனர். காசாவின் பெரும்பகுதிகள் இடிபாடாக மாற்றப்பட்டபோதும் டெயிர் அல் பலாஹ்வில் கட்டடங்கள் பெரிய அளவில் சேதமின்றி காணப்படுவதோடு மருத்துவ நிலைகள் தொடர்ந்து இயங்கும் அதேநேரம் குடிநீர் வசதிகள் மற்றும் கழிவுநீர் அகற்கு முறைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
டெயிர் அல் பலாஹ்வில் எஞ்சிய இஸ்ரேலிய பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெயிர் அல் பலாஹ் நிர்வாகப் பகுதிக்கு படையினர் இன்னும் நுழையவில்லை என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எஞ்சிய பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு அங்கு தடுத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதன் காரணமாகவும் படையினர் அங்கு நுழையாமல் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
காசாவில் எஞ்சியுள்ள 50 பணயக்கைதிகளில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தப் படை நடவடிக்கை தொடர்பில் பணயக்கைதிகளின் குடும்பத்தினர் கவலையை வெளியிட்டிருப்பதோடு பணயக்கைதிகளை பாதுகாப்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளனர்.
காசாவில் பட்டினியால் கடந்த சனிக்கிழமை தொடக்கம் குறைந்தது 19 பேர் உயிரிழந்திருப்பதோடு எதிர்வரும் நாட்களில் பட்டினிச் சாவு அதிகரிக்கக் கூடும் என்று காசா சுகாதார அமைச்சு எச்சரித்திருக்கும் நிலையிலேயே இஸ்ரேல் தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
மருத்துவமனைகளில் எரிபொருள், உணவு உதவி மற்றும் மருந்துகள் தீர்ந்துவரும் நிலையில் முக்கிய செயற்பாடுகள் தடைப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் பேச்சாளர் கலீல் அல் தெக்ரான் கூறியதாவது, மருத்துவ பணியாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மாத்திரம் பெறுவதாகவும் பசி மற்றும் சோர்வு காரணமாக நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவில் காசாவில் முன்னெடுக்கப்படும் உதவி விநியோக இடங்களில் தொடர்ச்சியாக இஸ்ரேலியப் படை தாக்குதல் நடத்துவதோடு இவ்வாறான தாக்குதல்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் 67 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவில் உதவி பெறுவதற்கு ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மக்களை அச்சுறுத்தும் நிலையில் இருந்து கலைப்பதற்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேலின் புதிய நடவடிக்கைகள் மற்றும் உயிரிழப்புகள் கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள் மற்றும் பட்டினி பிரச்சினை ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் இது காட்டாரில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளை பாதிக்கக் கூடும் என்றும் ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.
60 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று தொடர்பிலேயே டோஹாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இதுவரை முன்னேற்றம் எட்டப்படவில்லை.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 134 பேர் கொல்லப்பட்டு மேலும் 1,155 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 59,029 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 142,135 பேர் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment