வெளிநாட்டு அமைச்சின் கொன்சியுலர் பிரிவு பத்தரமுல்லைக்கு மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 24, 2024

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியுலர் பிரிவு பத்தரமுல்லைக்கு மாற்றம்

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியுலர் பிரிவு, பத்தரமுல்லை ‘சுஹுருபாய’ (Suhurupaya on Sri Subhuthipura Road, Battaramulla) கட்டடத்தின் 16ஆம் மாடியிலுள்ள புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்படவிருப்பதாக வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது.

இந்தப் பிரிவு எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி முதல் இந்த முகவரியில் செயற்படுமென வெளிநாட்டு அமைச்சு நேற்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய அலுவலகத்தில் வழமை போன்று திங்கள் முதல் வெள்ளிவரை காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை சகல கொன்சியுலர் சேவைகளையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

‘சுஹுருபாயவிலுள்ள புதிய கொன்சியுலர் அலுவலகத்தில் மின்னியல் ஆவண அத்தாட்சிப்படுத்தல் (e-DAS) மாற்றம் செய்வதற்காக கொழும்பிலுள்ள கொன்சியுலர் பிரிவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் இம்மாதம் 29ஆம், 30ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மின்னியல் முறைமை (e-DAS) மாற்றம் செய்யப்படும் காலத்தில், யாழ்ப்பாணம், திருகோணமலை, குருநாகல், கண்டி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய கொன்சியுலர் சேவைகள் அலுவலக நேரங்களில் வழமை போன்று நடைபெறும். 

பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்களில் பொதுமக்கள் தமது அத்தாட்சிப்படுத்துவதற்கான ஆவணங்களை வழமை போல சமர்ப்பிக்க முடியும். 

அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள், 2024 வியாழக்கிழமை, மே 02ஆம் திகதி மட்டுமே விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும். 

இதேவேளை வசதியீனங்களையும் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் அவசரமாக அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டிய தமது விண்ணப்பங்களை கொழும்பிலுள்ள கொன்சியுலர் அலுவலகத்தில் அல்லது எந்தவொரு பிராந்திய அலுவலகத்தில் இம்மாதம் 26ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக வெளிநாட்டமைச்சு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment