பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 28, 2024

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், கூட்டுத் தீர்வுகளைக் காண ஒன்றுபடுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அழைப்பு விடுத்தது.

பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் அந்தக் குழு அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை குழுவில் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத ஒரு சாதாரண மனிதனுடைய நிலைமையை கருத்திற் கொண்டு, லங்கா சதொச நிறுவனத்துடன் இணைந்து உணவு முத்திரை அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குதல், மக்கள் நட்பு ரீதியான வரிப் பொறிமுறையை அமுல்படுத்துதல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முயற்சியாண்மைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல் மற்றும் உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல் போன்ற முன்மொழிவுகளும் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு அரச சேவையின் வினைத்திறன் இன்மையே பிரதான காரணம் என கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர்.

மேலும், கலாசாரம், நல்லிணக்கம் மற்றும் பலதரப்பட்ட இனக்குழுக்களை கொண்ட தேசமாகவும் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரக் கட்டமைப்பொன்று எமது நாட்டில் உள்ள நிலையிலும், அந்த விடயங்களை இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதற்கமைய, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வுகளை உள்ளடக்கிய பொதுவான திட்டத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் மற்றும் தீர்வுகளை முன்வைத்து தம்முடன் இணைந்து கொள்ளுமாறு குழுவின் தலைவர் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் பியதிஸ்ஸ, சஹன் பிரதீப் விதான, வைத்திய கலாநிதி கயாஷான் நவனந்த, மஞ்சுளா திசாநாயக்க, பி.வை.ஜி. ரத்னசேகர, செய்யத் அலி சாஹிர் மௌலானா, மொஹமட் முஸம்மில், உதயன கிரிந்திகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment