கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் அபூபக்கர் தாஹிர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 26, 2024

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் அபூபக்கர் தாஹிர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் செயலாளராக அபூபக்கர் தாஹிர் (SLAS) அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டு, அதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடித்தத்தை நேற்று (25) அமைச்சின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட நிலையில், இன்று (26) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர்.ஷியாஉல் ஹக், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீஸ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், மாவட்டப் பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், கணக்காளர் எம்.சஜ்ஜாத் அஹமட் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

அப்துல் காதர் அபூபக்கர், மீராசாய்வு சுபைதா உம்மா ஆகியோரின் புதல்வரான இவர், ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவரும் கல்லூரியின் கணித, விஞ்ஞானப் பிரிவின் முதல் மாணவருமாவார்.

அத்துடன், கடந்த காலங்களில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவர் சங்கச் செயலாளராக கல்லூரிசார் செயற்பாடுகளிலும் கல்குடா பள்ளிவாயல் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொருளாளராக சமூகம் சார் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றியுள்ளதுடன், கிராம மட்ட அமைப்புக்களில் பங்கு கொண்டு சமூக சேவைப்பணிகளில் ஈடுபாட்டுடன் செயலாற்றியுள்ளார்.
பொதுச்சேவைத் துறையில் அனுபவமும் நிருவாக ஆளுமையையும் பெற்ற இவர், மத்திய அரசினால் அகில இலங்கை ரீதியில் 2012ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை நிருவாக சேவை அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

மர்ஹூம் ஏ.கே.எம்.உதுமான் (SLAS) அவர்களுக்குப்பின் சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதேசத்திலிருந்து அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நிருவாக சேவை அதிகாரி என்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரராகவும் திகழ்கின்றார்.

நிருவாக சேவை அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொழில் ஆணையாளராக கொழும்பிலும், உதவிப் பிரதேச செயலாளராக தோப்பூரிலும், பிரதேச செயலாளராக மூதூரிலும் கடமையாற்றிய நிலையில், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையளராக நியமனம் பெற்றார்.

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளராகவும், கிழக்கு மாகாண தொழில் ஆணையாளராகவும் கடமை புரிந்து வந்த நிலையில் இன்று (26) முதல் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment