சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து : அரசியலமைப்பு, எம்.பிக்கள் சிறப்புரிமையை மீறுவதாக சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 26, 2024

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து : அரசியலமைப்பு, எம்.பிக்கள் சிறப்புரிமையை மீறுவதாக சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

எதிர்க்கட்சியால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றும்போது அச்சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சபாநாயகர் சரியாக அமுல்படுத்தாமை, அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு இன்று (26) நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி, ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இன்று (25) இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை இரண்டையும் மீறியதால் அவர் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று (26) கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நமது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய 3 முக்கிய தூண்கள் செயல்படுகின்றன. சட்டங்களை ஏற்றுக் கொள்வது சட்டமன்றத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதோடு, அதன் சட்ட மற்றும் அரசியலமைப்பு அமுலாக்கம் சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளின் பொறுப்பாகும். நிகழ்நிலை காப்பு சட்டம் சட்டவிரோதமான முறையிலயே இன்று சட்டமாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சட்ட வரைவு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்து, சபாநாயகர் தலைமையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர் கையெழுத்திட்டு, உயர் நீதிமன்றத்தின் உயர் சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் இதை நாட்டின் சட்டமாக்கியுள்ளார். இதன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சபாநாயகர் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் சட்டத்தை பின்பற்றி, சட்டங்களை சரியாகவும் முறையாகவும் நிறைவேற்ற வேண்டும். அதை அவர் வேண்டுமென்றே மீறினார் என்றும், எனவே, நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கையில் சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

தாம் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல தடவைகள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த தவறை சரி செய்யுமாறு முன்மொழிவுகளை சமர்ப்பித்த போதும், அந்த பிரேரணைகளை வேண்டுமென்றே நிராகரித்ததன் மூலம் அவர் அத்தகைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர் இல்லை என்பதனால் நாம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டு, அதன் பின்னர் இவ்விவகாரத்தை உடனே விவாதத்திற்கு எடுத்து பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment