இஸ்ரேலில் தொழில் தருவதாக பண மோசடியில் ஈடுபடுவோர் குறித்து முறையிடுங்கள் - அமைச்சர் மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Monday, February 26, 2024

இஸ்ரேலில் தொழில் தருவதாக பண மோசடியில் ஈடுபடுவோர் குறித்து முறையிடுங்கள் - அமைச்சர் மனுஷ நாணயக்கார

முறையற்ற வகையில் பணம் கொடுத்து இஸ்ரேலில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியாது. எவரேனும் அவ்வாறு கூறி பணம் பெற்றிருந்தால் அத்தகையவர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு தெரியப்படுத்துங்கள். அதன் மூலம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இஸ்ரேலில் விவசாயத்துறைக்காக 39 பேர், வீட்டு தாதியர்களாக 32 பேருக்கும் விமான பயணசீட்டுக்களை வழங்கி வைக்கும் வைபவம் இன்று (26) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலில் விவசாய தொழில் துறையில் 642 பேருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதுடன் இவ்வருடம் மாத்திரம் வீட்டு தாதியர்களாக 1102 பேருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்

இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர், இஸ்ரேலில் தொழிலுக்கு செல்பவர்களை தடுக்க ஒரு மாபியா குழு செயற்பட்டு வந்தது. அக்குழு தங்கள் இலக்குகளை அடைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கொச்சைப்படுத்தியது.

வெளிநாட்டு தொழிலுக்காக செல்கின்ற அனைத்து தொழிலாளிகளும் எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதர்களைப் போன்றவர்கள்.
எனவே தொழிலுக்கு செல்லும் நீங்கள் அனைவரும் உங்களது தொழிலை முறையாக செய்து இன்னும் பல இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும் வகையில் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையின் சட்டங்களுக்கும் இஸ்ரேல் சட்டங்களுக்கும் எதிராக அந்த நாட்டில் தங்கியுள்ள எவருக்கும் வேலை வழங்க வேண்டாம் என இஸ்ரேல் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தேன். அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வேலை வழங்கினால் எமது இலங்கையர்கள் எவரையும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறினேன். இஸ்ரேலிய அரசாங்கம் எனது கோரிக்கையை ஏற்று தொழில் வழங்குவதைத் நிறுத்தியது.

மாற்றுவழியில் வேறு நபர்களுக்கு பணம் கொடுத்து தொழிலை பெறமுடியாது. எனவே, அவ்வாறு யாராவது பணம் கொடுத்திருந்தால், இரகசியமான முறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அல்லது எமது அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். அப்போது நாம் அத்தகைய நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்.

இங்கு செல்பவர்கள் நாட்டுக்கு வந்த பிறகு தொழில் செய்யும் எண்ணத்தில் வரக்கூடாது. மாறாக அனைவரும் தொழில் வழங்குவோராக மாறி பலருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க கூடிய நபராக வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment