முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரையும் பதிவு செய்து QR முறைமை : அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் விசேட குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 16, 2024

முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரையும் பதிவு செய்து QR முறைமை : அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் விசேட குழு நியமனம்

நாட்டில் முச்சக்கர வண்டி சாரதிகளாக செயற்படும் அனைவரையும் பதிவு செய்து தரவுத் தொகுதியொன்றை தயாரிக்கும் வகையில், QR குறியீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘கரு சரு’ திட்டத்தின் ஊடாக முச்சக்கரவண்டிச் சாரதிகளின் தொழிற்சங்கங்களை நிறுவுவதற்கான இடைக்கால வழிநடத்தல் குழு நேற்று (16) முதற்கட்டமாக ஸ்தாபிக்கப்பட்டது.

தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்ற துறைசார் குழுக்களை நிறுவுவது தொடர்பான கலந்துரையாடலின்போதே இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கான நிபுணத்துவ சபை ஸ்தாபிக்கப்படும் வரை இந்த இடைக்கால வழிநடத்தல் குழு முச்சக்கர வண்டிச் சாரதிகளின் தொழில்சார் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

நாடு முழுவதிலும் செயற்பட்டுவரும் அனைத்து முச்சக்கர வண்டிச் சாரதிகளின் சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இந்த இடைக்காலக் குழுவில், அவர்களின் தொழில் கௌரவத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவது தொடர்பாக இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் அடங்கிய பிரேரணை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு முச்சக்கர வண்டிச் சாரதிகளாக பணிபுரியும் அனைவரையும் தரவு கட்டமைப்பில் பதிவு செய்து மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment