வெள்ள அனர்த்தத்தினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் காரணமாக மேற்கொண்ட முன்பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பாரிய சொத்து இழப்புக்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
அனர்த்தம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் கடந்த 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சீர்செய்து, பல்கலைக்கழகத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்காக உபவேந்தரின் நேரடி கண்காணிப்பில் ஊழியர்களினால் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான் கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகுந்த சிரமத்துடன் சுத்தப்படுத்தும் ஊழியர்களுடன் உபவேந்தர் உள்ளிட்ட குழுவினரும் இணைந்து சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
சீரற்ற காலநிலை மற்றும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்ததன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22.01.2024 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள அதேவேளை பல்கலைக்கழகத்துக்குள் அவசர நிலையை பிரகடனப்படுத்தி சகல தரப்பு ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வளாகத்தில் முழுமையாக சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், அரபு மற்றும் இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி எம்.எச்.ஏ. முனாஸ், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், மற்றும் பேராசிரியர்கள் கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன். செயலாளர் எம்.எம்.முஹம்மட் காமில் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பல்கலைக்கழகத்துக்குள் இருந்த வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் தாழ்வான சில இடங்களில் தற்போதும் நீர் தங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது. மேலும் கட்டடத் தொகுதிகளுக்குள் உட்புகுந்த வெள்ள நீரினால் தளபாடங்கள், உபகரணங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பயனாக ஊழியர்களின் மேலான ஒத்துழைப்புடன் சொத்து இழப்புக்களை குறைக்க கூடியதாக இருந்தது.
எவ்வாறாயினும் வெள்ள நீரை அகற்றி, கட்டடங்களையும் சூழலையும் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தோடு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், சேதங்கள், மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால அனர்த்த தவிர்ப்பு திட்டவரைபுகள் தொடர்பிலும் விரைவில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுத்திகரிப்பு பணிகளில் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
நூருல் ஹுதா உமர், எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம்.அஜாத்கான், எம்.என்.எம்.அப்ராஸ்
No comments:
Post a Comment