துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு வலிதற்றது : தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 16, 2024

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு வலிதற்றது : தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை வலிதற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று (17) தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்களின் விசாரணையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர, அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுஸைன் ஆகியோரால் இதற்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினால் இத்தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment