திருகோணமலை மாவட்டம் கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் தற்காலிக இரும்பு பாலத்தை பொருத்த 10 இலட்சம் ரூபா நிதியை விடுவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நன்றி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இந்த விவகாரம் தொடர்பில் உரையாற்றும் போதே எம்.எஸ். தௌபீக் இவ்வாறு ஆளுநருக்கு நன்றி கூறினார்.
நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் உரையாற்றறி எம்.எஸ். தௌபீக் எம்.பி மேலும் இதன்போது கூறியதாவது, “கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் குறிஞ்சாக்கேணியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறிஞ்சாக்கேணி பாலம் உடைந்தது. இந்த பாலத்தை செய்து தருமாறு மக்கள் மத்தியில் எழுந்த கோரிக்கையை அடுத்து 2021ஆம் ஆண்டு குறித்த பாலத்தை புனரமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதனை தொடர முடியாது போனது.
இதேவேளை, தற்போது பாலத்தின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதனால் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. இப்பாலத்தை நிர்மாணிக்க நிதியை பெற்றுத் தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் நான் கோரிக்கையொன்றை முன்வைத்தேன்.
உடனடியாக குறித்த நிதியை விடுவிக்க ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்துள்ளார். இதற்காக அவருக்கு இந்த உயரிய சபையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
No comments:
Post a Comment